Published : 30 Sep 2024 01:04 PM
Last Updated : 30 Sep 2024 01:04 PM

‘யா’ அல்ல ‘யெஸ்’ சொல்லுங்கள்; உச்ச நீதிமன்றம் ‘காஃபி ஷாப்’ இல்லை: தலைமை நீதிபதி

புதுடெல்லி: 'யா' அல்ல 'யெஸ்' என்று சொல்லுங்கள்; உச்ச நீதிமன்றம் ஒன்றும் காஃபி கடை அல்ல என்று மனுதாரர் ஒருவரை தலைமை நீதிபதி எச்சரித்த சம்பவம் இன்று (செப். 30) உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

மனுதாரர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அடிப்படை உரிமை மீறல்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் பிரிவு 32-ன் கீழ் அவர் தனது மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தன்னை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததாகவும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அடிப்படை உரிமை மீறல்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் பிரிவு 32, இந்த மனுவுக்கு பொருத்தமானதா என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். முன்னாள் நீதிபதியை எதிர்மனுதாரராக வைத்து எப்படி பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் நீதிபதி விஷயத்தில் கண்ணியம் இருக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த மனுதாரர், “யா, யாஅப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். நிவாரணம் பெறுவதற்காக மனு தாக்கல் செய்யலாம் என எனக்கு சொல்லப்பட்டது” என்று பதிலளித்தார்.

மனுதாரர், சாதாரண மொழியைப் பயன்படுத்தியதால், அதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, "யா யா என்று சொல்லாதீர்கள். யெஸ், யெஸ் என்று சொல்லுங்கள். இது காஃபி ஷாப் அல்ல. இதுபோன்று யா, யா என்று பேசுபவர்களோடு எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “நீதிபதி கோகோய் இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர். நீதிபதிக்கு எதிராக இது போன்ற மனுவை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. அதோடு, இந்த அமர்வு உங்கள் மனுவை ஏற்காததால் நீங்கள் உள் விசாரணையை நாட முடியாது. ஓய்வுபெற்ற நீதிபதி கோகோயின் பெயரை மனுவில் இருந்து முதலில் நீக்குங்கள். அதன் பிறகு உங்கள் மனுவை பதிவுத்துறை பரிசீலிக்கும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x