Published : 30 Sep 2024 05:26 AM
Last Updated : 30 Sep 2024 05:26 AM
புதுடெல்லி: விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரூ.11,200 கோடிமதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட நீதிமன்றம் முதல்ஸ்வர்கேட் வரையில் நிலத்துக்கடியில் புனே மெட்ரோ ரயில் பாதை திட்டம் (பேஸ்-1) ரூ.1,810 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் முழுமையடைந்ததை அடுத்து பிரதமர் மோடி அதனை நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்து வைத்தார்.
அதேபோன்று, ஸ்வர்கேட் முதல் கட்ரஜ் வரையிலன புனே மெட்ரோ பேஸ் -1 விரிவாக்க திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் சுமார் ரூ.2,955 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது.
மார்கெட் யார்ட், பத்மாவதி மற்றும் கட்ரஜ் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் 4.56 கி.மீ தூரத்துக்கு நிலத்துக்கடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுதவிர, தேசிய தொழில்துறை காரிடார் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7,855 ஏக்கரில் பிட்கின் இண்டஸ்ட்ரியல் பூங்காவையும் பிரதமர் காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். சத்ரபதி சம்பாஜி நகருக்கு தெற்கே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த திட்டம் டெல்லி-மும்பை தொழில்துறை வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். மொத்தம் ரூ.6,400 கோடி செலவில் இந்த திட்டம் மூன்று கட்டங்களாக உருவாக்கப்படும். இந்த திட்டம் மரத்வாடா பிராந்தியத்தை துடிப்பான பொருளாதார மையமாக மாற்றும் என்று உறுதியளிக்கப்பட் டுள்ளது.
திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியாவின் தனித்தன்மையுடன் நவீனமயமாக்கலை சமநிலைப்படுத் துவது முக்கியம். இந்தியா நவீனமயமாக வேண்டும், நவீனமய மாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதேநேரம், அதன் வளமான பாரம்பரியத்தை பெருமையுடன் நிலைநிறுத்த வேண்டும்" என்றார்.
மேலும், சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள், வணிக பயணிகள் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையில் சோலாப்பூர் விமான நிலையத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்தின் மேம்படுத்தப்பட்ட டெர்மினல் கட்டிடம் மூலம் ஆண்டுக்கு சுமார் 4.1 லட்சம் பயணிகளுக்கு சேவை வழங்க முடியும். இதற்கான நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி. “விமான நிலையத்தின் இந்த டெர்மினல் விரிவாக்கம் சோலாப்பூருக்கு நேரடியாக விமான இணைப்பை வழங்கும். அத்துடன் விட்டல் பிரபுவின் பக்தர்கள் இந்த நகரத்துக்கு வந்து செல்வதை எளிதாக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT