Published : 29 Sep 2024 05:48 AM
Last Updated : 29 Sep 2024 05:48 AM
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஜம்மு நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர்நரேந்திர மோடி பேசியதாவது:
கடந்த 2016-ம் ஆண்டு இதே நாள் (செப். 28) நள்ளிரவில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. “இது புதியஇந்தியா, அவர்கள் (பாகிஸ்தான் தீவிரவாதிகள்) எங்கள் வீட்டில்(நாட்டுக்குள்) புகுந்து தாக்குதல்நடத்தி வீரர்களை கொன்றார்கள். அதற்கு தக்க பதிலடி கொடுத்தோம்” என உலக நாடுகளிடம் தெரிவித்தோம்.
இதனால், மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்தினால், நரகத்தில் இருந்தாலும் மோடி தங்களை கண்டுபிடித்து விடுவார் என்பது தீவிரவாதிகளுக்கு தெரியும்.
அந்தப் பக்கத்திலிருந்து (பாகிஸ்தான்) துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வந்தபோது, காங்கிரஸார் வெள்ளைக் கொடியை காண்பித்தனர். பாஜக அரசு துப்பாக்கிகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது, அந்தப் பக்கத்திருந்தவர்கள் சுயநினைவுக்கு வந்தார்கள்.
குடும்ப ஆட்சியால்... தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயககட்சிகளின் குடும்ப ஆட்சியால்காஷ்மீர் மக்கள் சோர்வடைந்துவிட்டார்கள். ஊழல், வேலைவாய்ப்பில் பாகுபாடு உள்ளிட்ட அதே நடைமுறையை மக்கள் மீண்டும் விரும்பவில்லை.
தீவிரவாதம், பிரிவினைவாதத் தையும் அவர்கள் விரும்ப வில்லை. அமைதி, தங்கள்குழந்தைகளுக்கான சிறந்த எதிர்காலத்தை மக்கள் விரும்புகிறார்கள். பாஜக அரசு அமைய வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.
எனவே, நடந்து முடிந்த 2 கட்ட தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். வரும்தேர்தலிலும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். காஷ்மீரில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவி்ததார்.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக அதே மாதம் 28-ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் பல தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT