Published : 29 Sep 2024 08:12 AM
Last Updated : 29 Sep 2024 08:12 AM

பைபிள் படிப்பதால் தேவஸ்தான பதிவேட்டில் ஜெகன் மோகன் கையெழுத்திட விரும்பவில்லை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து

அமராவதி: “திருப்பதி தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட ஜெகன் மோகன் விரும்பவில்லை. பைபிள் படிப்பதை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அதனால்தான் அவர் திருமலைக்கு வரவில்லை” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் தெரிவித்தார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு அரசியல் செய்கிறார் என்றும், இதனால் திருமலையின் புனிதம் கெட்டுவிட்டது என்றும் கூறிய ஜெகன், திருமலைக்கு நேற்று காலை கால்நடையாக சென்று சுவாமியை தரிசிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

திருமலைக்கு வேற்று மதத்தவர் வந்தால், தேவஸ்தான நிபந்தனையில் உள்ளபடி, தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னரே அவர் சுவாமியை தரிசிக்க வேண்டும். இல்லையேல் திருமலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என பலர் போர்க் கொடி தூக்கினர். இதைத் தொடர்ந்து, திருப்பதி பயணத்தை ஜெகன் மோகன் ரத்து செய்துவிட்டார். இதுகுறித்து ஜெகன் கூறுகையில், ‘‘கோயிலுக்கு செல்வதை யாரும்தடுக்கக்கூடாது. ஆனால் முன்னாள்முதல்வரான என்னையே கோயிலுக்கு வரவிடாமல் முதல்வர் சந்திரபாபு தடுக்கிறார்‘‘ என்று குற்றம் சாட்டினார்

இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஜெகனை யாரும் திருமலைக்கு வர வேண்டாம் என கூறவில்லை. தேவஸ்தானத்தில் உள்ள நிபந்தனைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. 4 சுவற்றுக்குள் பைபிள் படிக்கிறேன் எனஜெகன் மோகனே ஒப்புக்கொண்டுள்ளார். திருமலைக்கு வந்தால் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட நேரிடும் என்பதால் அவர் திருமலைக்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் இந்த கருத்து தலித்களையும் அவமானப்படுத்துவதாக உள்ளது என ஜெகன் மோகன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x