Published : 28 Sep 2024 02:00 PM
Last Updated : 28 Sep 2024 02:00 PM
பாட்னா: இந்திய வானிலை ஆய்வு மையம் பிஹாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஹாரின் மேற்கு மற்றும் கிழக்கு சம்பரான், சீதாமர்ஹி, ஷீயோகர், முசாபர்பூர், கோபல்கஞ்ச், சிவான், சரண், வைஷாலி, பாட்னா, மதுபான மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த முன்னறிவிப்பினைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே, பாக்ஸர், போஜ்பூர், சரண், பாட்னா, சமஸ்திபூர், பெகுசாரை, முன்கர் மற்றும் பாகல்பூர் உள்ளிட்ட கங்கை கரையோரம் அமைந்துள்ள 12 மாவட்டங்கள் ஏற்கெனவே வெள்ளத்தைச் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் 13.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பிஹார் நீர்வளத்துறை கோசி மற்றும் கண்டக் ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமையின் தீவிரம் காரணமாக, கண்டக் ஆற்றின் வால்மிகிநகர் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். சனிக்கிழமை காலை 8 மணிக்கு 6.87 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதாக மாநில நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், சனிக்கிழமை காலை 8 மணிக்கு கோசி ஆற்றின் பிர்பூர் அணையில் இருந்து 7.54 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT