Published : 28 Sep 2024 05:06 AM
Last Updated : 28 Sep 2024 05:06 AM

பிரசாதங்களை கோயில் பூசாரிகளின் மேற்பார்வையில் தயாரிக்க வேண்டும்: ராமர் கோயில் தலைமை பூசாரி வலியுறுத்தல்

லக்னோ: திருப்பதி ஏழுமலையான் கோயில்பிரசாதமான லட்டுவில், விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா போன்ற இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் பிரசாதங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று பலர் குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர்கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் நேற்று கூறியதாவது: தனியார் நிறுவனங்கள் கோயில் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கோயிலின் பூசாரிகள் மேற்பார்வையில்தான் பிரசாதங்கள் தயாரிக்கப்பட வேண்டும். அதேபோல் கோயில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நெய்யின் தரத்தையும் அறிய வேண்டும்.நாடு முழுவதும் கோயில்களுக்கு வழங்கப்படும் எண்ணெய் மற்றும்நெய்யின் தரத்தை அறிய வேண்டும். கோயில்களின் புனிதத் தன்மையை கெடுப்பதற்கு சர்வதேச சதி நடப்பதாக சந்தேகப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரா கோயில் தர்ம ரக் ஷா சங் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வர்த்தக ரீதியாக தயாரிக்கப்படும் இனிப்புகளுக்குப் பதில் இனிமேல் பண்டைய கால செய்முறைப்படி கோயில் பிரசாதங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளோம். பக்தர்கள் வழங்கும் பழம், மலர்கள் மற்றும் இயற்கை பொருட்களை வைத்து பிரசாதங்கள் தயாரிக்க முடிவெடுத்துள்ளோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரா கோயில் தர்ம ரக் ஷா சங் தேசிய தலைவர் சவுரப் கவுர் கூறும்போது, ‘‘பிரசாத நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டிய நேரம் இது. எனவே, பாரம்பரிய முறைப்படி சுத்தமான, சாத்வீகமான பிரசாதங்களை தயாரிக்க மதத் தலைவர்களுக்குள் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையில் பிரயாக்ராஜ் நகரில் உள்ள பல்வேறு கோயில்களில் இனிப்புகளை காணிக்கையாக வழங்க வேண்டாம் என்று கோயில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. அதற்குப் பதில்தேங்காய், பழம், உலர்ந்த பழங்களை காணிக்கையாக அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x