Published : 28 Sep 2024 04:47 AM
Last Updated : 28 Sep 2024 04:47 AM

நம்பிக்கை பத்திரத்தில் கையெழுத்திட வலியுறுத்தியதால் திருமலை பயணத்தை ரத்து செய்தார் ஜெகன்மோகன்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில், அதில்விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலப்படம் செய்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஏஆர் நிறுவனம் மீது திருப்பதி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என இந்து சங்கங்கள், தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா உள்ளிட்ட கட்சிகளும், ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. நாடு முழுவதும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

அரசியல் ஆதாயத்துக்காக சந்திரபாபு நாயுடு, பொய்யான ஒரு கருத்தை கூறியதால், திருமலையின் புனிதம் கெட்டு விட்டது என்றும், இதனால், 28-ம் தேதி ஆந்திர மாநிலம் முழுவதும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பாவத்தை கழுவிட வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தரப்பில் அறிக்கை விடப்பட்டது. மேலும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, 28-ம் தேதி (இன்று) காலை திருப்பதியில் அலிபிரி வழியாக மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிக்க வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை வெளியானதும், இந்து அமைப்பினர், தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக, விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், சாது சங்கங்கள் திருப்பதிக்கு வர தொடங்கினர். திருமலை கோயில் மற்றும் பிரசாதத்தின் புனிதத்தை கெடுத்த ஜெகன்மோகன் ரெட்டி திருமலைக்கு செல்வதை தடுப் போம் என சிலரும், வேற்று மதத்தை சார்ந்த ஜெகன்மோகன் கண்டிப்பாக தேவஸ்தானத்தின் நிபந்தனைப்படி, இந்து கடவுள் மீது நம்பிக்கை உள்ளதாக இருக்கும் படிவத்தை நிரப்பி கையொப்பம் இட்ட பின்னரே திருமலைக்கு செல்ல வேண்டுமெனவும் எனசிலரும் வலியுறுத்த தொடங்கினர். பலர் திருப்பதியில் தேவஸ்தான அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

சந்திரபாபு மீது புகார்: இந்நிலையில், தாடேபல்லி கூடத்தில் தனது கட்சி அலுவலகத் தில் நேற்று மதியம் ஜெகன்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சுவாமி தரிசனத்துக்கு செல்வதை தடுக்கும் செயல் நாட்டிலேயே எப்போதுமே நடந்ததில்லை. இப் போது ஆந்திராவில் நடந்துள்ளது. ஜெகன் திருமலைக்கு செல்ல அனுமதி இல்லை என எங்கள் கட்சியினருக்கு போலீஸார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்தும் பாஜகவினர் திருப்பதியில் குவிந்துள்ளனர்.

திருமலை லட்டு மீது சந்திரபாபு நாயுடு கூறியது அனைத்தும் பொய் பிரசாரங்களே. முதல்வர்பதவியில் உள்ள ஒருவர் வாய் கூசாமல் பொய் பேசுகிறார். தற்போது சுவாமி மீது நம்பிக்கை இருந்தால் தேவஸ்தான நிபந்தனைப்படி கையெழுத்திட வேண்டும் எனும் புதிய பிரச்சினையை கொண்டு வருகிறார். என்னுடைய ஜாதி, மதம் என்னவென்று மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கோயிலுக்கு செல்லும் ஒருவரை ’நீ என்ன மதம்? என கேட்பது சரியல்ல. ஒருமுன்னாள் முதல்வருக்கே அனுமதி இல்லை என்றால், மற்றவர்களின் கதி என்ன? மதத்தின் பெயரால் அரசியல் செய்ய கூடாது. இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x