Published : 30 Jun 2018 12:10 PM
Last Updated : 30 Jun 2018 12:10 PM
தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்த பிஷப் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள கன்னியாஸ்திரி கோட்டயம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் நான்கு ஆண்டுகளுக்குமுன் நடந்துள்ளது. பலமுறை சர்ச் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் அதை எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
மறைமாவட்ட பிஷப் ஒருவர் இந்த கன்னியாஸ்திரியை 13 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2014ல் கேரளாவின் குரவிலங்காடுபகுதியில் உள்ள ஓர் ஆதரவற்றோர் இல்லம் அருகிலுள்ள ஒரு விருந்தினர் இல்லத்தில் வைத்து முதல் முறை அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். குற்றஞ்சாட்டப் பட்ட பிஷப் தற்போது வட இந்தியாவில் ஒரு மறைமாவட்டத்தின் பிஷப் ஆக பணியாற்றி வருகிறார். அவர் கேரளத்தை சேர்ந்தவர்.
இதுகுறித்து ஏற்கெனவே திருச்சபையின் உயர் பிஷப்களிடம் புகார் அளித்ததாக கன்னியாஸ்திரி தெரிவித்தார். ஆனால் இதுநாள்வரை குறிப்பிட்ட அந்த பிஷப் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தனது புகார் குறித்து எந்தவித சாதகமான அணுகுமுறையும் சர்ச் மேற்கொள்ளவில்லை என்பதாலேயே தற்போது காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பிஷப் எதிர் மனு ஒன்றை கன்னியாஸ்திரிக்கு எதிராக காவல்நிலையத்தில் அளித்துள்ளார். தான் அவருக்கு இடம் மாறுதல் அளித்ததால் பழிவாங்கவே இவ்வாறு புகார் அளித்துள்ளதாக அவர் கூறுகிறார் என்று அதில் பிஷப் தெரிவித்துள்ளார்.
மாவட்ட காவல்துறை தலைமை இவ்வழக்கை துணை காவல்கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒரு உயரதிகாரிடம் ஒப்படைத்துள்ளார். இரு புகார்கள் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கன்னியாஸ்திரியின் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை எந்தவித எதிர்வினையும் சர்ச் அதிகாரிகளிடமிருந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT