Published : 27 Sep 2024 06:41 PM
Last Updated : 27 Sep 2024 06:41 PM
புதுடெல்லி: நவீன கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பன்முக ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ள குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், உலகளாவிய அமைதியே நிலையான வளர்ச்சிக்கான உத்தரவாதம் என்று குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான தொடக்க சர்வதேச ஈடுபாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் உரையாற்றினார். அப்போது அவர், "உலகளாவிய அமைதியே நிலையான வளர்ச்சிக்கான உத்தரவாதம். புவிசார் அரசியல் கட்டமைப்புகளும் மோதல்களும் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
உலக அமைதிக்கும், நீடித்த வளர்ச்சிக்கும் இடையே அடிப்படை தொடர்பு உள்ளது. உலக விவகாரங்களில் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப பாதுகாப்பில் மறுவரையறை செய்யப்பட்ட அணுகுமுறை தேவை.
இணையதள குற்றங்கள், பயங்கரவாதம் முதல் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தற்கால அச்சுறுத்தல்கள் வரை அனைத்தையும் எதிர்கொள்ள பலதரப்பு ஒத்துழைப்பு அவசியம்.
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உலகளாவிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பருவநிலை மாற்றம், தொற்றுநோய்கள், உலகளாவிய நடைமுறைகளில் இடையூறுகள் போன்ற சவால்கள் தற்போது உள்ளன.
இயந்திர கற்றல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், சிக்கல்களை தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்க முடியும். தொழில்நுட்பங்கள் ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்; தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்தியா தலைமையிலான ஜி-20 கருப்பொருளின் அடிப்படையில், அனைவருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில் இந்தியாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. எல்லை கடந்த சவால்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கு சிறந்த மதிப்புகள் அவசியம்.
அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றில் உலக நாடுகள் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும். அமைதியும் பாதுகாப்பும் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அடிப்படையானவை" என தெரிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவரின் செயலாளர் சுனில் குமார் குப்தா, விமானப்படை அதிகாரிகள், தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கமாண்டன்ட் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT