Published : 27 Sep 2024 03:52 PM
Last Updated : 27 Sep 2024 03:52 PM

முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி போராட்டம்: கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் அறிவிப்பு

கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் | கோப்புப் படம்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி, வரும் அக்டோபர் 8ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (செப். 27, 2024) செய்தியாளர்களிடம் பேசிய வி.டி. சதீசன், "ஆளும் இடது ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் பி.வி அன்வர் சமீப நாட்களாக முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கூறி வரும் குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை. முதல்வர் அலுவலகத்தைச் சுற்றிலும் சந்தேகத்துக்குரிய மாஃபியா கும்பல்கள் உள்ளதாகவும், அவர்களை கட்டுப்படுத்த முதல்வர் பினராயி விஜயன் தவறிவிட்டதாகவும் அன்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

மலப்புரத்தில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் முதல்வரின் ஆசீர்வாதம் இருப்பதாகவும் அன்வர் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) எம்.ஆர். அஜித்குமார், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்திப்பதற்காக பினராயி விஜயனின் தூதராக அனுப்பப்பட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுமார் 25 நாட்களாக அன்வரின் குற்றச்சாட்டு விஷயத்தில் பினராயி விஜயன் மவுனம் சாதித்து வருகிறார். உண்மையில் பினராயி விஜயன், அன்வரைப் பார்த்து அச்சமடைந்துள்ளார். மறைமுக நோக்கங்களுக்காக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் பினராயி விஜயன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்த வரும் அக்டோபர் 8ம் தேதி தலைமைச் செயலகம் மற்றும் மாவட்டத் தலைமையகங்கள் முன்பாக போராட்டங்கள் நடத்த உள்ளோம்” என தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், அன்வர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், “எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் அன்வர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அன்வரின் பேச்சுக்கள் அவர், இடது ஜனநாயக முன்னணியில் இருந்து வெளியேற முடிவெடுத்துவிட்டார் என்பதையே காட்டுகிறது.

இடது ஜனநாயக முன்னணிக்கு வெளியே தான் இருப்பதாகவும், இடது ஜனநாயக முன்னணியின் உயர்மட்டக் குழு கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அன்வர் கூறி இருக்கிறார். அவர் என் மீது சுமத்தியுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் மறுக்கிறேன். எனினும், இது தொடர்பாக என்னிடம் கேட்க உங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கும். அவற்றுக்கு தனியான ஒரு செய்தியாளர் சந்திப்பு மூலம் பதில் அளிக்கிறேன்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x