Published : 27 Sep 2024 09:56 AM
Last Updated : 27 Sep 2024 09:56 AM
மும்பை: பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையாவின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில், சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மும்பையைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையா. இவரது மனைவி மேத்தா சோமையா. மிரா பயந்தர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட பொதுகழிப்பறைகள் மற்றும் பராமரிப்பில் ரூ.100 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாகவும், இதில் கிரித் சோமையா மற்றும் அவரது மனைவி மேத்தா சோமையாவுக்கு தொடர்பு உள்ளதாகவும் பேட்டி ஒன்றில் சிவசேனா (உத்தவ் அணி) மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.
இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் தங்கள் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டதாக மேதா சோமையா, சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மும்பை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஆர்த்தி குல்கர்னி முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர்கள், இந்த தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும், சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் அளிக்க கோரியும் இரு மனுக்களை தாக்கல் செய்தனர். இவற்றை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் ஆர்த்தி குல்கர்னி, சஞ்சய் ராவத்துக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT