Published : 27 Sep 2024 06:12 AM
Last Updated : 27 Sep 2024 06:12 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ம் தேதி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். பின்னர் ஐ.நா.பொது சபை கூட்டத்தில் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் பைடனுடன் இருநாட்டு உறவு குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் வழியாக இந்தியாவுக்கு 5 பலன்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ராணுவம் ஒப்புதல்: முதன்முறையாக அமெரிக்க ராணுவம், இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்பங்களை பகிர ஒப்புதல் தெரிவித்துள்ளது. ராணுவ தளவாடங்கள், தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் செமி கண்டக்டர்களுக்கான தயாரிப்பு ஆலையை இந்தியாவில் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா சபையில், நீதி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு கிளை அமைப்புகள் உள்ளன. அந்தக் கிளை அமைப்புகளில் பாதுகாப்பு கவுன்சில் அதிகாரம் பொருந்திய அமைப்பாகும். மற்ற ஐநா அமைப்புகளால் பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலிடம் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், இந்தக் கவுன்சிலில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய 5 நாடுகள் மட்டுமே இன்று வரை நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க அமெரிக்க அதிபர் பைடன் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
2 புதிய தூதரகங்கள்: அமெரிக்கவாழ் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், பாஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் 2 புதிய இந்திய தூதரகங்கள் திறக்கப்பட உள்ளன.
அதிநவீன ட்ரோன்: தற்போது இந்தியா அதன் ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து 31 ஹன்டர் - கில்லர் ட்ரோன்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் 50,000 அடி உயரத்தில், தொடர்ச்சியாக 40 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது. மணிக்கு 442 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். 1,700 கிலோ வெடிகுண்டுகளை ட்ரோனில் சுமந்துசெல்ல முடியும். லேசர் தொழில்நுட்பத்துடன் செயல்படும் 4 ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை எதிரிகளின் இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும்.
297 கலைப் பொருட்கள்: இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பாரம்பரிய கலைப் பொருட்களை, மீண்டும் இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. இவை 4,000 ஆண்டுகள் பழமைமிக்கவை என்று கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 640 இந்திய கலைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 578 கலைப் பொருட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT