Published : 26 Sep 2024 07:03 PM
Last Updated : 26 Sep 2024 07:03 PM
ராம்கர் (ஜம்மு காஷ்மீர்): “பாகிஸ்தான் நாடானது மனித குலத்தின் எதிரி” என்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ராம்கர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மூத்த தலைவரும், உத்தரப் பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "சேவை, பாதுகாப்பு, நல்லாட்சி ஆகியவற்றின் சின்னமாக பாஜக திகழ்கிறது. ராம்கர் சட்டமன்றத் தொகுதி மக்கள், பாஜகவுக்கு ஆசி வழங்க உள்ளனர். மகாராஜா ஹரி சிங் மற்றும் பிரிகேடியர் ராஜேந்திர சிங் ஆகியோர் தங்களது கடின உழைப்பாலும், தீவிர முயற்சியாலும் ஜம்மு காஷ்மீரை பூமியின் சொர்க்கமாக மாற்றினர். ஆனால், ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதத்தின் கிடங்காகவும், மதவெறி எனும் நோய் பாதித்த பகுதியாகவும் மாற்றிய பாவத்தை காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையே செய்தன. உண்மையில் இவை அரசியல் கட்சிகள் அல்ல. தனியார் நிறுவனங்கள்.
தற்போது ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. இதுவே 'புதிய இந்தியாவின்' 'புதிய ஜம்மு காஷ்மீர்'. இப்போது ஜம்மு காஷ்மீரின் அடையாளம் பயங்கரவாதம் அல்ல; சுற்றுலா. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சொன்னதை செய்துவிட்டது. பூமியின் சொர்க்கமாகத் திகழும் ஜம்மு-காஷ்மீர், தற்போது ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவைக் கண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் தேசியவாத காற்று வீசுகிறது. இங்குள்ள தேசியவாதிகள் பாஜகவின் பக்கம் நிற்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் மக்களின் இந்த உற்சாகம், பயங்கரவாதத்தையும் அராஜகத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதில் பாஜகவுடன் இருப்பதைக் காட்டுகிறது. இங்குள்ள குடும்ப அரசியலை, பிரித்தாளும் அரசியலை கைவிட்டு மக்கள் ஜனநாயக அரசை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள், பாஜகவைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இதற்கு முன் இருந்திராத வகையில் நீங்கள் காட்டி வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் வந்த பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக மாறப்போகிறது. இதுகுறித்த சலசலப்புதான் பாகிஸ்தானில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ஜனநாயகத்தை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பக்கம் இந்தியா உள்ளது. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உணவுத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்கள் இயற்கையாகவே இந்தியாவுடன் இணைய ஆர்வம் காட்டுகிறார்கள். பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இதனால், பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கேற்கும் உரிமை தங்களுக்கும் இருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தானுடன் தங்களால் சேர்ந்து இருக்க முடியாது என்று பலுசிஸ்தானும் கூறி வருகிறது. பாகிஸ்தான் நாடானது மனித குலத்தின் எதிரி; மனித குலத்தின் புற்றுநோய். இந்த புற்றுநோயில் இருந்து உலகம் விடுதலை பெற வேண்டும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT