Published : 26 Sep 2024 04:04 PM
Last Updated : 26 Sep 2024 04:04 PM
அஸ்ஸாந்த் (ஹரியானா): ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மாநிலத்தை அழித்துவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அஸ்ஸாந்த் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, "சில நாட்களுக்கு முன்பு நான் அமெரிக்கா சென்றிருந்தேன். ஹரியானாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்கா வந்திருப்பதாக என்னிடம் கூறப்பட்டது. நான் அந்த சகோதரர்களை அங்கு சந்தித்தேன். ஒரு சிறிய அறையில் 15-20 பேர் வசித்து வருவதாக அவர்கள் கூறினார்கள்.
அவர்கள் எப்படி அமெரிக்கா வந்தார்கள் என்பது குறித்து கேட்டேன். அவர்கள் கடல் வழியாக கடந்து வந்த நாடுகளின் பட்டியலை ஒருவர் என்னிடம் கொடுத்தார். காடுகளையும் மலைகளையும் கடந்து அமெரிக்காவை அடைந்ததாகவும், வழியில் பல சகோதரர்கள் விழுந்து இறந்ததைப் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
இந்தப் பயணத்திற்கு ரூ.35 லட்சம் செலவாகியதாகவும், அதற்காக சிலர் தங்கள் வயல்களை விற்றதாகவும், சிலர் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும் என்னிடம் கூறப்பட்டது. இவ்வளவு பணத்தில் நீங்கள் ஹரியானாவிலேயே உங்கள் தொழிலை நடத்தியிருக்க முடியுமே என்று கேட்டதற்கு, ஹரியானாவில் ரூ.50 லட்சத்தை வியாபாரத்தில் முதலீடு செய்திருந்தால் வியாபாரம் தோல்வியடைந்திருக்கும் என்று ஒருவர் கூறினார். எங்களைப் போன்றவர்களுக்கு ஹரியானாவில் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதைக் கேட்க எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
கோடீஸ்வரரின் மகனாக இல்லாமல் ஓர் இளைஞன் ஏழையாக இருந்தால், அவருக்கு வங்கியில் கடன் கிடைக்காது, அவரால் வியாபாரம் செய்ய முடியாது, ராணுவத்திலும் சேர முடியாது, பொதுத்துறை நிறுவன பணிகளுக்கும் செல்ல முடியாது. மொத்தத்தில் நரேந்திர மோடி, இளைஞர்களுக்கான அனைத்து கதவுகளையும் மூடிவிட்டார்.
அமெரிக்காவில் உள்ள ஹரியானா இளைஞர்களிடம், “நீங்கள் உங்கள் குடும்பத்தை எப்போது மீண்டும் சந்திப்பீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இன்னும் 10 வருடங்களுக்கு எங்கள் பெற்றோர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க முடியாது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியா திரும்பியதும் தங்களது குடும்பத்தினரை 5 நிமிடம் சந்தித்து அமெரிக்காவில் தாங்கள் நலமாக இருப்பதாக கூற வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். நலமாக இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தால் குடும்ப உறுப்பினர்கள் நம்ப மறுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து நான் இந்தியா திரும்பியதும், கர்னால் சென்று அமெரிக்கா சென்றுள்ள இளைஞர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு சிறு குழந்தை கணினி அருகே ஓடி வந்து, அப்பா.. அப்பா.. என்று சத்தமாக கத்த ஆரம்பித்தது. 'அப்பா, திரும்பி வா' என அந்த குழந்தை அழைத்தது. அந்தக் குழந்தையால் 10 வருடங்களுக்கு தனது அப்பாவைப் பார்க்கவோ கட்டிப்பிடிக்கவோ முடியாது. 10 ஆண்டுகளாக ஹரியானாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக, ஹரியானாவை அழித்ததுதான் இதற்குக் காரணம்.
நரேந்திர மோடியும் ஹரியானா அரசும் வேலைவாய்ப்பு முறையை ஒழித்துவிட்டன. ஹரியானா விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை, அவர்களின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதில்லை. ஆனால், நாட்டின் சில கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஹரியானாவில் போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்து வருகிறது. குஜராத்தில் உள்ள அதானி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் யாராவது தண்டிக்கப்பட்டார்களா? நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், விமானங்கள், சாலைகள் அனைத்தும் அதானியின் கைகளில் உள்ளன.
ஆனால் ஏழைகளுக்கு தவறான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால், சிறு வியாபாரிகளை ஒழித்துவிட்டு சீனப் பொருட்களை இந்தியாவில் விற்க மோடி அரசு விரும்புகிறது” என குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT