Published : 26 Sep 2024 12:18 PM
Last Updated : 26 Sep 2024 12:18 PM
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் நேற்று (செப். 26) நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளில் கிட்டத்தட்ட 40% பேர் ஜம்முவில் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பெரும்பாலான பண்டிட்டுகள் அங்கிருந்து வெளியேறி ஜம்மு உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளில் 40% பேர் ஜம்முவில் நேற்று வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “ஜம்முவில் உள்ள 19 வாக்குச் சாவடிகளில் கிட்டத்தட்ட 40% வாக்குகளும், அதைத் தொடர்ந்து உதம்பூரில் 37% வாக்குகளும் பதிவாகியுள்ளன” என்று நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையர் அரவிந்த் கர்வானி தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 3,514 ஆண்கள் மற்றும் 2,736 பெண்கள் என மொத்தம் 6,250 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். ஒரு காலத்தில் காஷ்மீரி பண்டிட்டுகளின் கோட்டையாக இருந்த ஹபகடல் தொகுதியில் அதிகபட்சமாக 2,796 வாக்குகளும், லால் சவுக்கில் 909 வாக்குகளும், ஜாதிபாலில் 417 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
செப்டம்பர் 18 அன்று நடந்த முதல் கட்ட வாக்கெடுப்பில், ஜம்முவில் உள்ள 19 வாக்குச் சாவடிகளில் இடம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளில் 27% பேர் வாக்களித்துள்ளனர். உதம்பூரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் 31.39% பண்டிட்டுகள் வாக்களித்துள்ளனர். முதல் கட்டத் தேர்தலில் தெற்கு காஷ்மீர் தொகுதியைச் சேர்ந்த 34,000 பேரில் 9,218 காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய நிலையில், இரண்டாவது கட்டத்தில் 15,500 க்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 6,250 பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1-ம் தேதி என 3 கட்டங்களாக தேர்தலை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக கடந்த வாரம் (செப்.18) 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜவுரி, பூஞ்ச், காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகர், புத்காம், கந்தர்பால் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT