Published : 26 Sep 2024 11:00 AM
Last Updated : 26 Sep 2024 11:00 AM
புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று (செப்.26) இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதனையடுத்து 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி பிணையில் விடுதலையாகும் நிலை உருவாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஊடகப் பேட்டியில் கூறுகையில், “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஜாமீனுக்காக செந்தில் பாலாஜிக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இரண்டு பேர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்றார்.
‘அமைச்சராகத் தடை இல்லை’ - செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏதேனும் நிபந்தனை விதித்துள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “அதுமாதிரியான எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எத்தகைய சட்டபூர்வ தடையும் இல்லை” என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். மேலும் அவர், “இந்தத் தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பே பிரதானமானது என்று உச்ச நீதிமன்றம் நிறுவியுள்ளது” என வழக்கறிஞர் தெரிவித்தார்.
வழக்கு பின்னணி: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
ஏற்கெனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா அமர்வு இன்று (செப்.26) அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவு முறையாக சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னர் இன்று மாலையோ அல்லது நாளையோ செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலையாவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT