Published : 26 Sep 2024 05:57 AM
Last Updated : 26 Sep 2024 05:57 AM

கலப்பட நெய்யும், ஊழியர்களுக்கு தண்டனையும்: திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து கல்வெட்டு துறை இயக்குநர் சிறப்பு பேட்டி

கோப்புப் படம்

திருமலை: கல்வெட்டு துறை இயக்குநர் முனிரத்தினம் "இந்து தமிழ் திசை"க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: அரசர் காலங்களிலேயே திருப்பதி ஏழுமலையானின் பிரசாதம் எப்படி தயாரிக்க வேண்டும்? திருப்பதியில் இருந்து நெய்யை எவ்வாறு பாதுகாப்பாக திருமலைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்? அதற்கான போக்குவரத்து எப்படி இருத்தல் அவசியம் ? என்பது போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன. அரசர் காலத்தில் நெய்யை சரிவர பராமரிக்காமல் போன கோயில் ஊழியர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் கொடுத்த தண்டனை விவரங்களும் கல்வெட்டுகளில் பதிவிடப்பட்டுள்ளன. கி.பி 8-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்ட 1,150 கல்வெட்டுகளில் 600-க்கும் மேற்பட்டவை தமிழிலும், மற்றவை தெலுங்கு, சம்ஸ்கிருதம், கன்னட மொழிகளில் உள்ளன.

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், கதவாரியர்கள், யாதவராயர்கள், மற்றும் விஜயநகர பேரரசர்கள் ஆட்சி கால கல்வெட்டுகளில் இந்த விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் 640 திருமலை ஏழுமலையான் கோயில் சுவர்களிலும், 340 கோவிந்தராஜ பெருமாள் கோயில் சுவர்களிலும், மற்ற 170 திருப்பதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கோயில் சுவர்களிலும் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், இக்கல்வெட்டுகளில் கோயில் சார்பில் நடத்தப்பட்ட உற்சவங்கள், பக்தர்கள் சார்பில் நடத்தப்பட்ட உற்சவங்கள் குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோயில் பிரசாதங்கள், ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் குறித்தும் கூட இந்த கல்வெட்டுகள் மூலம் நாம் அறிய முடியும்.ஏழுமலையானுக்கு வெள்ளை திருப்பொனகம் (வெண் பொங்கல்), திருக்கனா மடை (மனோகர பட்டி), அப்ப படி, பாயசம், பருப்பவியல், சுகியம், வடைபட்டி (திருப்பணியாரம்), தத்யோதனம், பானகம், சீட்டை படி, கோடி படி, தோகைபடி (தோசை), இதலி பதி, பாலேட்டு குழம்பு (திரட்டுப்பால்), கந்த கர்க்கரை(கற்கண்டு), கதுகோரை, உளுந்தோக்கரை, மிளகோக்கரை, திலாண்ணம், புளியோக்காரை (புளியோதரை), பொரி, அவல் படி, குத்தாண்ணம், தேன் குழல், குனுக்கு படி, சர்க்கரை பொங்கல், எள்ளு உருண்டை, பொரிவிளாங்கை படி போன்ற பிரசாதங்கள் எப்படி செய்ய வேண்டும். எந்தெந்த விசேஷ நாட்களுக்கு பெருமாளுக்கு படைக்க வேண்டும் என்பது குறித்து கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனந்த நிலையம் என குறிப்பிடும் சுவாமியின் கருவறை கோபுரத்தின் பகுதியில் உள்ள 100 கல்வெட்டுகளை பதிவெடுத்ததில், அதில் மன்னர்கள், அரசியர்கள், அக்கால செல்வந்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு வருகை புரிந்ததும், அவர்கள் கொடுத்த காணிக்கை விவரங்களுமே உள்ளன. இதில், மன்னர்கள், அரசியர்கள் ஆகியோர் தங்களின் பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றுக்கு ஏழுமலையான் கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்திய விவரங்களும், அப்போது படைக்கப்பட்ட நைவேத்தியங்கள், பிரசாதங்களின் விவரங்களும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.

ஏழுமலையான் கோயிலுக்கு குல்லி, பணம், பொன், வராகன், கத்யாணம் என பல வகைகளில் பொற்காசுகளையும், நிலங்களையும் தானமாக வழங்கிய விவரங்களும் உள்ளன. பல்லவ ராணியான கானவன் பெருந்தேவி, 4,176 பொற்காசுகளை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். ஸ்ரீ கிருஷ்ண தேவராயரும், தனது அரசிகளான திருமலா தேவி, சின்ன தேவியுடன் கோயிலுக்கு 7 முறை வந்துள்ளார். அப்போது சுவாமிக்கு அவர் பொற்காசுகளால் சுவர்ணாபிஷேகம் செய்துள்ளார். மேலும் பிரசாதம் தயாரிக்கவும், நைவேத்தியங்கள் படைக்கவும் தங்க பாத்திரங்களை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள மடப்பள்ளியை ’போட்டு’ என்றழைக்கின்றனர். அந்த ‘போட்டு’ எப்படி சுத்தமாக இருக்க வேண்டும். பிரசாதம் எவ்வாறு தயாரிக்க வேண்டும். அதற்கான ‘திட்டம்’ (அளவு) என்ன ? என்பவை குறித்தும் கல்வெட்டுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரசாதம் தயாரிப்பதிலோ, கோயில் நிர்வாகத்திலோ தவறு செய்யும் ஊழியர்கள், அல்லது அர்ச்சகர்களுக்கு தண்டனையும், அபராதமும் கூட வழங்கப்பட்டுள்ளது. திருச்சானூரில் கோயில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களை வரவழைத்து, நெய் தரத்தை சரிபார்க்காதது, கோயில் விளக்கில் நெய் மற்றும் கற்பூரத்தை சரிவர பயன்படுத்தாதது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் ஒரு கூட்டம் நடந்துள்ளது.

இந்த விசாரணையில் தவறு இழைத்தவர்களிடம் பொற்காசுகள், வெள்ளி காசுகள் அபராதமாக வசூலிக்கப்பட்டதுடன், அவர்களை உடனடியாக கோயில் பணியில் இருந்து நீக்கியும் உள்ளனர். மேலும், அந்த வம்சாவளியினர் கோயில் பணி செய்ய நிரந்தர தடையும் விதிக்கப்பட்டது. இவ்வாறு கல்வெட்டு துறை இயக்குநர் முனிரத்தினம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x