Published : 26 Sep 2024 05:10 AM
Last Updated : 26 Sep 2024 05:10 AM

ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தலில் 56 சதவீத வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தலின்போது கந்தர்பால் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வந்த இளம்பெண் வாக்காளர்.

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1-ம் தேதி என 3 கட்டங்களாக தேர்தலை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக கடந்த வாரம் (செப்.18) 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 6 மாவட்டங்களை சேர்ந்த 25.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜவுரி, பூஞ்ச், காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகர், புத்காம், கந்தர்பால் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில்தான் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

உமர் அப்துல்லாவின் 2 தொகுதி: தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா வேட்பாளராக போட்டியிடும் கந்தர்பால், புத்காம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. அதேபோல, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா போட்டியிடும் நவுஷரா தொகுதி, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா போட்டியிடும் மத்திய ஷால்டாங் தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

2-வது கட்ட வாக்குப் பதிவுக்காக 3,502 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும் 13,000 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதில் 1,056 வாக்குச்சாவடிகள் நகரங்களிலும் 2,446 வாக்குச்சாவடி கள் கிராமங்களிலும் அமைக்கப் பட்டு இருந்தன. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு போலீஸார் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில், 2-ம் கட்ட தேர்தலில் 56.06 சதவீதம் வாக்கு பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரி பி.கே.போலே தெரிவித்தார். எனினும், இறுதி நிலவரம் வெளிவரும்போது இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான 3-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு, அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்: ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பதை கண்காணிக்க 15-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் ஸ்ரீநகரில் நேற்று குவிந்திருந்தனர். இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரி ஜோர்கன் ஆண்ட்ரூஸ் தலைமையில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் பல்வேறு வாக்குச்சாவடி களைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அவர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

காலை 10 மணி முதல் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சென்று ஆய்வு செய்தனர். வாக்குப்பதிவு முடிந்த பிறகும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை அவர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் வாக்களிக்க வந்த பொதுமக்களிடம் அவர்கள் நிறை - குறைகளைக் கேட்டறிந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளில் அவர்கள் திருப்தி அடைந்துள்ளதுபோல தெரிகிறது. தலைமைத் தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது" என்றார். மெக்ஸிகோ, கொரியா, சோமாலியா, ஸ்பெயின், சிங்கப்பூர், நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா, நார்வே, பனாமா, அல்ஜீரியா, ருவான்டா, தென் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x