Published : 19 Jun 2018 10:23 AM
Last Updated : 19 Jun 2018 10:23 AM
திருமலையில் உற்சவரான மலையப்பர் இன்று செவ்வாய்க்கிழமை முதல் 5 நாட்களுக்கு எவ்வித கவசமும் இன்றி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். வருடத்தில் இந்த 5 நாட்கள் மட்டுமே மலையப்பர் இவ்வாறு காட்சியளிப்பது ஐதீகம்.
ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் உற்சவராக வலம் வரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஆண்டுக்கு 5 நாட்கள் அவர் அணிந்திருக்கும் தங்கக் கவசம் களையப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மலையப்ப சுவாமியை கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக மண்டத்திற்கு கொண்டு செல்வர். பின்னர் ஆகம விதிகளின்படி உற்சவர்கள் மீதுள்ள தங்கக் கவசங்கள் அகற்றப்படும்.
பின்னர் வரும் 23-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு திருமலையில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றில் தங்கக் கவசம் நீக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளே பக்தர்களுக்கு காட்சியளிப்பர். பின்னர் 24-ம் தேதி உற்சவ மூர்த்திகளுக்கு வைர கவசம் அணிவிக்கப்படும்.
மறுநாள் 25-ம் தேதி முத்து அங்கியும், 26-ம் தேதி மீண்டும் தங்கக் கவசமும் அணிவிக்கப்பட்டு மாடவீதிகளில் திருவீதியுலா நடத்தப்படும். பின்னர் ஓராண்டு வரை இந்த தங்கக் கவசம் களையாமல் அனைத்து சேவைகளும் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT