Published : 25 Sep 2024 11:33 AM
Last Updated : 25 Sep 2024 11:33 AM

சீன எல்லைப் பிரச்சினையில் 75% தீர்ந்துவிட்டதாக கூறிய கருத்து: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

புதுடெல்லி: “சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் 75 சதவீத விகாரங்கள் தீர்ந்துவிட்டதாக நான் கூறியது கிழக்கு லடாக்கில் இருந்து அந்நாட்டு துருப்புகள் வெளியேறியதை மட்டுமே குறிக்கும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

நியூயார்க்கில் உள்ள ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட்-ல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சீனாவுடன் எங்களுக்கு மிகவும் கடினமான வரலாறு உள்ளது. சீனாவுடன் எங்களுக்கு வெளிப்படையான ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும் அவைகளை மீறி சீனா, கரோனா தொற்று பரவல் மத்தியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே அதிக துருப்புகளை நிறுத்தியதை நாங்கள் பார்த்தோம். அது ஒரு அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியது. அது நடக்கவும் செய்தது. எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் பல வீரர்கள் உயிரிழந்தனர். இது இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

சீனாவுடனான எல்லைப் பிரச்சனைகள் 75 சதவீதம் தீர்ந்து விட்டதாக நான் கூறியது என்பது கிழக்கு லடாக் எல்லையில் இருந்து துருப்புகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதை மட்டுமே குறிக்கும். அது பிரச்சினையின் ஒரு பகுதி. அதனால், மோதல் புள்ளிகளில் இருந்து அதிக அளவிலான துருப்புகளைத் திரும்பப் பெற முடிந்தது. என்றாலும் சில ரோந்துப் பிரச்சினைகளில் தீர்வு காணப்பட வேண்டும். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக எல்லை விரிவாக்கம் தடுக்கப்பட வேண்டும்.

ஆசியாவின் எதிர்காலாத்துக்கு இந்தியா - சீனா உறவு மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். உலகம் பலதுருவங்களாக இருக்குமானால் ஆசியாவும் பலதுருவங்களாக இருக்கும். அதனால் இந்த உறவு ஆசியாவின் எதிர்காலத்தை மட்டும் பாதிக்காது, அந்தவகையில் உலகின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

ASEAN மையமாகக் கொண்ட ‘ஆக்ட் இஸ்ட் பாலிசி’-யை நீண்டகாலமாக நாம் பின்பற்றி வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் அது ASEAN-ஐக் கடந்து வளர்ச்சியடைந்திருப்பதை நாம் காண்கிறோம். இந்தோ - பசிபிக் ஒரு மூலோபாய விஷயமாக வருவதே ‘ஆக்ட் இஸ்ட் பாலிசி’-ன் வெற்றி. இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சர் பேசினார்.

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை பேச்சுவார்த்தையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், 75 சதவீத பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகவும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜெய்சங்கர் கூறிய நிலையில், அவரின் இந்த விளக்கம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x