Last Updated : 25 Sep, 2024 05:33 AM

 

Published : 25 Sep 2024 05:33 AM
Last Updated : 25 Sep 2024 05:33 AM

உமிழ்நீர், சிறுநீர் கலந்த பழரசம் விற்றதாக புகார்: உ.பி.யில் உணவகங்களை முறைப்படுத்த முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு

புதுடெல்லி: மேற்கு உ.பி.யின் ஷாம்லி மாவட்டம், சாலையோரக் கடை ஒன்றில் எடுக்கப்பட்ட காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதில் பழரசம் விற்பனை செய்பவர் அதில் எச்சிலை துப்பி வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக கடை உரிமையாளர் ஆசீப்பை ஷாம்பி காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்குமுன், காஜியாபாத் பழரசக் கடை ஒன்றில் 15 வயது சிறுவன் பழரசத்தில் சிறுநீர் கலந்து விற்றதாகப் புகார் எழுந்தது. இச்சிறுவனை கடந்த செப்டம்பர் 13-ம் தேதி அப்பகுதி பஜ்ரங்தளம் தொண்டர்கள் கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக கடைஉரிமையாளர் உள்ளிட்ட இருவரை காஜியாபாத் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் காஜியாபாத் லோனி பகுதி மக்களின் மகாபஞ்சாயத்து டிலா கிராமத்தில் கூடியது. சில துறவிகளும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், இதுபோல் தவறிழைக்கும் கடைகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சிக்கியவர் சிறுபான்மையினர் என்பதால் அந்த மதத்தினரின் கடைகளில் பொருட்கள் வாங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாநிலம் முழுவதும் உணவகங்களில் சோதனை நடத்தி அவற்றை முறைப்படுத்த அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அதிகாரிகளுக்கு உ.பி. அரசு பிறப்பித்த உத்தரவில், ‘‘உ.பி.யின் அனைத்து சாலையோரக் கடைகள், தாபாக்கள், சிறியமற்றும் பெரிய உணவகங்களை முறைப்படுத்த வேண்டும். இவற்றில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தி அறிவிப்பு பலகை தொங்கவிட வேண்டும். இதில், கடை உரிமையாளர், மேலாளர் மற்றும் சமையல் பொறுப்பாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும். இதற்கு உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து உணவகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம். உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x