Published : 25 Sep 2024 05:28 AM
Last Updated : 25 Sep 2024 05:28 AM

லட்டு விவகாரத்தில் கிண்டல் செய்தால் சும்மா இருக்க மாட்டேன்: பிரகாஷ் ராஜுக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை

விஜயவாடா: திருப்பதி லட்டு பிரசாதத்துக்காக கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது வாங்கப்பட்ட கலப்பட நெய்யில், விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரு தினங்களுக்கு முன் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப் பட்டதைப் பற்றி கேள்விப்பட்டு மிகவும் கவலை அடைந்தோம். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்’’ என்று கூறியிருந்தார்.

இதை டேக் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட பதிவில்,“அன்புள்ள பவன் கல்யாண், இந்த சம்பவம் நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில் நடந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு நீங்கள் ஏன் தேவையற்ற அச்சத்தைப் பரப்புகிறீர்கள்?. நாட்டில் ஏற்கெனவே போதுமான வகுப்புவாத பதற்றங்கள் இருக்கின்றன. (மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி)' என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், பவன் கல்யாண், விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயிலுக்கு நேற்று காலை சென்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தை சிலர் கேலியும், கிண்டலாகவும் பார்க்கிறார்கள். சனாதன தர்மம் குறித்து கேலியும், கிண்டலுமாக பேசினால் சும்மா இருக்க முடியாது. என் வீட்டுக்குள் கல் எரிந்தால் எப்படி பார்த்து கொண்டு இருக்க முடியாதோ, அப்படித்தான் இதுவும். இப்படிப்பட்ட சென்டிமென்டான விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜும் பிரச்சினையை அறிந்து பேச வேண்டும். பிரச்சினையை திசைதிருப்பும் வகையாக பேசினால் பார்த்து கொண்டு இருக்க முடியாது” என்று எச்சரிக்கை செய்தார்.

இதுகுறித்து பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். திரும்பி வந்ததும் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார்.

4 நாளில் 14 லட்சம் லட்டு விற்பனை: இவ்வளவு பிரச்சினைக்கு மத்தியிலும் ஏழுமலையானை தரிசித்த பின்னர் பக்தர்கள் லட்டு வாங்குவதில் சளைக்கவில்லை. கடந்த 19-ம் தேதி 3.59 லட்சம், 20-ம் தேதி 3.17 லட்சம், 21-ம் தேதி 3.67 லட்சம், 22-ம் தேதி 3.60 லட்சம் என மொத்தம் 13.99 லட்சம் லட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x