Published : 24 Sep 2024 06:27 PM
Last Updated : 24 Sep 2024 06:27 PM
புதுடெல்லி: தற்சார்பு இந்தியாவின் ஓர் அங்கமாக இந்திய கப்பல் கட்டும் தளங்களில் ரூ.4,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 31 கப்பல்கள் இந்திய கடலோரக் காவல் படைக்காக கட்டப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
41-வது இந்திய கடலோரக் காவல் படைத் தளபதிகள் மாநாட்டை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதுடெல்லியில் இன்று (செப். 24) தொடங்கிவைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க நாளான இன்று, பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமனே, செயலாளர் (பாதுகாப்பு உற்பத்தி) சஞ்சீவ் குமார், செயலாளர் (முன்னாள் படைவீரர் நலன்) டாக்டர் நிதின் சந்திரா, மூத்த தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், "நாட்டின் பரந்த கடலோரப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வது, பயங்கரவாதம் மற்றும் ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் மனிதர்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதன் மூலம் இந்தியாவின் முதன்மையான காவல் படையாக இந்திய கடலோரக் காவல் படை விளங்குகிறது. இக்கட்டான காலங்களில் இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள், நாட்டுக்கு ஆற்றும் சேவையையும், அர்ப்பணிப்பையும் பாராட்டுக்குரியது.
இந்திய கடலோரக் காவல்படையை உலகின் வலிமையான கடலோர காவல்படையாக மாற்ற வேண்டும். வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, மனிதர்களை மையமாகக் கொண்ட சக்தியாக இருந்து தொழில்நுட்பம் சார்ந்த சக்தியாக இந்திய கடலோர காவல்படை முன்னேற வேண்டியது மிகவும் அவசியம்.
உலகம் தொழில்நுட்ப புரட்சியின் ஒரு கட்டத்தை கடந்து செல்கிறது. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றால் பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போதைய புவிசார் அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எதிர்காலத்தில் கடல்சார் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும். நாம் விழிப்புடனும் தயாராகவும் இருக்க வேண்டும்.
ஆயுதப்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல் படையை உள்நாட்டுத் தளவாடங்கள் மற்றும் உபகரணங்களுடன் நவீனப்படுத்தவும், வலுப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. 'தற்சார்பை' அடைவதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக, ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 31 கப்பல்கள் இந்திய கடலோரக் காவல்படைக்காக, இந்திய கப்பல் கட்டும் தளங்களால் கட்டப்பட்டு வருகின்றன.
மாறிவரும் காலத்திற்கேற்ப முப்படைகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்திய கடலோரக் காவல்படை தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், தனித்துவமான அடையாளத்தை உருவாக்க வேண்டும், தனது களத்தில் நிபுணத்துவம் பெற வேண்டும், புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும்" என வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT