Published : 24 Sep 2024 02:07 PM
Last Updated : 24 Sep 2024 02:07 PM

முடா ஊழல்: முதல்வர் சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடகா உயர் நீதிமன்றம்

பெங்களூரு: முடா ஊழல் விவகாரம் தொடர்பாக தன்னிடம் விசாரணை நடத்த ஆளுநர் வழங்கிய அனுமதியை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ந்த வழக்கை, அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான ஆளுநரின் அனுமதியை உறுதி செய்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, இன்று (செப். 24) தனது தீர்ப்பை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், “தன் அதிகாரத்தை பயன்படுத்தி சுதந்திரமாக விசாரணைக்கு அனுமதி வழங்கிய ஆளுநரின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. அதை எதிர்த்து மனு தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

புகார் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், முதல்வரின் நடவடிக்கையால் பலன் பெற்றவர்கள் வெளியாட்கள் அல்ல. முதல்வர் சித்தராமையாவின் குடும்ப உறுப்பினர்களே பயன் பெற்றுள்ளார்கள். சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி அளித்த ஆளுநரின் உத்தரவு எந்த விதத்திலும் உள்நோக்கம் கொண்டதல்ல" என்று தெரிவித்துள்ளார்.

க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதையடுத்து பார்வதியின் கோரிக்கைபடி, கடந்த ஆண்டு மைசூருவில் உள்ள விஜய நகரில் அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன‌. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்றும், முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விலை அதிகமுள்ள இடத்தை ஒதுக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தேவை என்பதால், சமூக ஆர்வலர்கள் மூவரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை தனித்தனியாக சந்தித்து புகார் அளித்தனர். அதில் முதல்வர் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினர்.

இதையடுத்து ஆளுநர் ஜூலை 26-ம் தேதி, இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்குமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா, அமைச்சரவையைக் கூட்டி நோட்டீஸை திரும்ப பெற வலியுறுத்தினார். ஆளுநர் தனது நோட்டீஸை திரும்ப பெறாததால் சித்தராமையா, தான் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என ஆளுநருக்கு பதிலளித்தார்.

இந்த பதில் திருப்தி அளிக்காததால் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். இதுதொடர்பாக அவர் சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகிய மூவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், “ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 மற்றும் பிரிவு 218-ன் கீழ் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குதொடர அனுமதி அளிக்கப்படுகிறது. அவர் மீது பார‌பட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த முதல்வர் சித்தராமையா, “எனக்கு எதிரான புகாரை முறையாக விசாரிக்காமல், என் மீது வழக்கு தொடர அவசர கதியில் ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இந்த முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது. இதனை எதிர்த்து சட்டரீதியாக போராடுவேன். பாஜக ஆட்சியில் வகுக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே எனது மனைவிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் எனது தவறு எதுவும் இல்லை. நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது. காங்கிரஸ் அரசை சீர்குலைக்க பாஜகவும் மஜதவும் இணைந்து சதித்திட்டம் தீட்டியுள்ளன. காங்கிரஸ் மேலிடமும், அமைச்சரவையும் எனக்கு ஆதரவாக உள்ளன.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x