Published : 24 Sep 2024 01:45 PM
Last Updated : 24 Sep 2024 01:45 PM

பத்லாபூர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்ட்டர்: எதிர்க்கட்சிகள் சாடல்

அக்ஷய் சிண்டே | கோப்புப்படம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அக்‌ஷய் ஷிண்டே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரம் ஆதாரத்தை அழிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நெருங்கி வருவதால், இந்த என்கவுன்டர் அங்கு அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த என்கவுன்ட்டர் விவகாரம் மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி, எதிர்க்கட்சியினரிடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்துள்ளது. இதுகுறித்து, மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கைகளில் விலங்கிடப்பட்டிருக்கும் போது எவ்வாறு துப்பாக்கியால் சுட்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், "அக்‌ஷய் ஷிண்டேயின் கைகள் இரண்டிலும் விலங்கிடப்பட்டிருந்த நிலையில் அவரால் எப்படி துப்பாக்கியால் சுட்டிருக்க முடியும்? சம்பவம் நடந்த பள்ளி பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது.

இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகள் நடந்து வந்தன. இப்போது இந்த என்கவுன்ட்டர் மூலமாக விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) கட்சி எம்.பி., சுப்ரியா சுலே கூறுகையில், “இந்தச் சம்பவம், மகாராஷ்டிராவில் சட்டம் மற்றும் நீதி அமைப்பின் முழு தோல்வியே” என்று சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிருத்விராஜ் சவான், "இது மகாராஷ்டிவுக்கு கறுப்பு நாள். அவர் (அக்க்ஷய் ஷிண்டே) கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். நடந்தது என்கவுன்ட்டர் என்று யாரும் நம்பமாட்டார்கள்.

சம்பவம் நடந்த நேரத்தில், மும்பையில் இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். தற்போதுள்ள ஆட்சியின் கீழிருக்கும் மகாராஷ்டிரா காவல்துறையால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த குற்றத்தின் உண்மை குற்றவாளி ஒரு போதும் பிடிக்கப்பட போவதே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி: மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் இரண்டு நர்சரி பள்ளிச் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்ஷய் குமார் (24) குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அவர் அந்தப்பள்ளியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். பள்ளியிலுள்ள கழிப்பறையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஐந்து நாட்களுக்கு பின்பு ஆக.17-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், தலோஜா சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக திங்கள்கிழமை பத்லாபூருக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த பயணத்தின்போது போலீஸ் வாகனம் தானே மாவட்டம் மும்பா பைபாஸ் அருகே சென்று போது, அக்ஷய் உதவி காவல் ஆய்வாளர் நிலேஷ் மோரின் பிஸ்டலைப் பறித்து பாதுகாப்புக்கு வந்த போலீஸ் குழு மீது தாக்குதல் நடத்தினார். பதிலுக்கு போலீஸார் திருப்பிச் சுட்டதில் அக்ஷய் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் மூன்று போலீஸார் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x