Published : 24 Sep 2024 12:01 PM
Last Updated : 24 Sep 2024 12:01 PM

திருப்பதி லட்டு பிரசாதத்தில் புகையிலை? - தெலங்கானா பக்தர் குற்றச்சாட்டு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் புகையிலை இருந்ததாக தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அண்மையில் திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சியின் போது கலப்பட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். இது தேசிய அளவில் அதிர்வலைகளை எழுப்பியது.

இந்நிலையில், இந்த விவகாரம் அடங்குவதற்குள் திருப்பதி லட்டில் புகையிலை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கம்மம் மாவட்டம் - கார்த்திகேயா டவுன்ஷிப்பை சேர்ந்த பத்மாவதி, கடந்த 19-ம் தேதி திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். வீடு திரும்பும் போது லட்டு பிரசாதம் வாங்கி வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் அக்கம் பக்கத்தினருக்கு லட்டு கொடுக்க முடிவு செய்துள்ளார். அப்போது அதில் வித்தியாசமான வாசம் வந்துள்ளது. தொடர்ந்து அதை உடைத்து பார்த்த போது லட்டுக்குள் புகையிலை காகிதத்தில் வைத்து சுற்றி இருப்பதை கவனித்துள்ளார்.

புனிதமான லட்டு பிரசாதத்தில் புகையிலையை பார்த்து மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது திருப்பதி கோயில் பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும், திருப்பதி கோயில் நிர்வாகம் லட்டு தயாரிப்பு பணியில் செலுத்தும் தரம் சார்ந்த நடவடிக்கை குறித்த கேள்வியையும் இது எழுப்பி உள்ளது.

முன்னதாக, கலப்பட நெய்யினால் லட்டு பிரசாதம் உட்பட மேலும் சில பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு அவை விநியோகம் செய்யப்பட்டதால், கோயிலில் பரிகார தோஷ பூஜைகள் நடத்துவது நல்லது என ஆகம வல்லுனர்கள் கருத்து தெரிவித்ததால், நேற்று (திங்கட்கிழமை) திருமலை யாக சாலையில் சாந்தி ஹோமம் நடந்தது. கோயிலின் மடப்பள்ளி, மாட வீதிகள் மற்றும் கோயிலுக்குள் உள்ள அனைத்து சன்னதிகள், கொடிமரம், பலிபீடம் ஆகிய இடங்களில் வாஸ்து சுத்தி மற்றும் பஞ்சகாவ்ய கும்ப ஜல சம்ப்ரோக்ஷணம் ஆகியவை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு விசேஷ நைவேத்தியம் படைக்கப்பட்டது. இந்த ஹோமத்தால் தோஷங்கள் நீங்கியதாக தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x