Published : 24 Sep 2024 04:20 AM
Last Updated : 24 Sep 2024 04:20 AM
புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைதலைமையிடமாகக் கொண்டு லோவி இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிய அளவில் பொருளாதார ரீதியாக உயர்ந்து இருக்கும் நாடுகளுக்கு லோவி இன்ஸ்டிடியூட் சார்பாக ஆசியா பவர் இன்டெக்ஸ் என்ற ஆய்வை வெளியிட்டு கவுரவப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடத்தி ஆய்வின்படி, ஆசியாவில் இந்தியாவின் பலம் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பலம் வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. ராணுவத் திறன், ராஜதந்திரம், கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய தரவரிசையில் இந்தியாவை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் வைத்துள் ளது லோவி இன்ஸ்டிடியூட்.
சீனாவின் பொருளாதார, ராணுவ வளர்ச்சி அதிகரித்து வந்தாலும், அதன் பலம் தட்டையாகவே உள்ளது. மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்ட கால கட்டமைப்பு சவால்கள் இதற்குக் காரணமாக இருக்கும். சீனாவின் பலம் அதிகரிக்கவோ அல்லது சரியவோ இல்லை. ஆனால் நிலையாகவோ அல்லது தட்டையாகவோ உள்ளது. அதே நேரம் அமெரிக்காவின் பலம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்தத் தரவரிசையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசியா பவர் இன்டெக்ஸ் ஆய்வில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் ராஜதந்திர செல்வாக்கு குறிப்பிடத்தக்க உயர்வைப் பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்களின் லட்சியம் ஆகியவற்றால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
பெருகிவரும் மக்கள்தொகை, பரந்த நிலப்பரப்பு, தற்போதையவாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியாவின் பொருளாதாரம் உள்ளது. நாட்டின் பொருளாதாரத் திறன் மதிப்பெண் 4.2 புள்ளிகள் அதிகரித்து, கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மறுமலர்ச்சி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அந்த இளைஞர்கள் அடங்கியமக்கள்தொகை வரும் தசாப்தங்களில் சக்தியை வழங்கி அது நாட்டுக்கு வளர்ச்சியைத் தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT