Published : 02 Jun 2018 08:24 AM
Last Updated : 02 Jun 2018 08:24 AM
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று, தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தலைமையில் பக்தர்களிடம் தொலைபேசியில் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல மாநில பக்தர்கள் தங்களது குறைகளை கூறினர். இதில் அனில் குமார் சிங்கால் பேசியதாவது:
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியின் தரம் மேலும் உயர்த்தப்படும். மலைப்பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். முதியோர், ஊனமுற்றோர், மாற்று திறனாளிகளுக்கு தரிசன ஏற்பாடுகள் மேம்படுத்தப்படும். தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் தேவஸ்தான ஊழியர்கள் கடுமையாக நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழுமலையானின் நகைகள் பாதுகாப்பாக உள்ளன. இதுபற்றி சிலர் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து, கோடை கால கூட்டத்தை சமாளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் நேற்று பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் 49,060 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை இணைய தளத்தில் வெளியிட்டனர். இதன் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம். தரிசனம் செய்ய தற்போது 24 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி நாராயணகிரி பகுதியில் வெளியே சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT