Published : 23 Sep 2024 03:15 PM
Last Updated : 23 Sep 2024 03:15 PM

லட்டு சர்ச்சை: திருப்பதி கோயில் சாந்தி ஹோமத்தால் அனைத்தும் தூய்மை ஆகிவிட்டதாக அர்ச்சகர் தகவல்

கலச நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் காட்சி

திருப்பதி: திருமலை பெருமாள் கோயிலில் சாந்தி ஹோமம் செய்யப்பட்டுவிட்டதால் அனைத்தும் தூய்மையாகிவிட்டதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் வேணுகோபல் தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 18-ம் தேதி தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியமலா ராவ், “தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான நான்கு அறிக்கைகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தன. எனவே நாங்கள் உடனடியாக விநியோகத்தை நிறுத்தினோம். மேலும் ஒப்பந்தக்காரரை பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளோம். அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடங்கப்படும். அதோடு, ​​சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து கடந்த 20ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “திருப்பதி பெருமாள் கோயில் லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக வெளியாகி உள்ள அறிக்கை தவறானது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்களின் நம்பிக்கையை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்” என மறுப்பு தெரிவித்திருந்தார்.

பல்வேறு பக்தர்கள் விரதம் இருந்து திருப்பதி கோயிலுக்குச் சென்று பெருமாளை தரிசிப்பது வழக்கம். அசைவ உணவு உண்பவர்களும் விரத நாட்களில் அசைவத்தை தவிர்ப்பார்கள். இந்த பின்னணியில், திருப்பதி பெருமாள் கோயில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்திருந்ததை திருப்பதி தேவஸ்தானமே ஒப்புக்கொண்டதால், இதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழந்தது. இதை கருத்தில் கொண்டு இன்று (திங்கள்கிழமை) காலை திருப்பதி பெருமாள் கோயிலில் சாந்தி ஹோமம் செய்யப்பட்டது. ஹோமத்தில் வைக்கப்பட்ட பஞ்சகவ்யம், கோயில் வளாகம், லட்டு தயாரிக்கும் சமையலறை, விநியோகிக்கும் இடங்கள், மலையில் உள்ள பிற கோயில்கள் ஆகியவற்றில் தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலின் தலைமை அர்ச்சகர் வேணுகோபல் தீட்சிதர், “திருப்பதி பெருமாள் கோயிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான செய்தி கடந்த 4-5 நாட்களாக உலகம் முழுவதும் பரவி உள்ளது. ஆய்வக அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இதற்கு தீர்வு காண ஆந்திரப் பிரதேச அரசும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் எங்களை அணுகின. ஆகம ஆலோசகர்கள் மற்றும் தலைமை அர்ச்சகர்களுடனான ஆலோசனையை அடுத்து, இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய பொருத்தமான சாந்தி ஹோமத்தை நடத்துமாறு நாங்கள் நேற்று (செப். 22) பரிந்துரைத்தோம். இந்த ஹோமத்தை நடத்தினால் அனைத்தும் மீண்டும் தூய்மை அடையும் என்பதை கூறினோம்.

எங்கள் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம், இன்று காலையே அந்த ஹோமத்தை மேற்கொண்டது. இன்று காலை, 6 மணிக்குப் பிறகு, வெங்கடேசப் பெருமாளின் அனுமதியையும், ஆசிர்வாதத்தையும் பெற்று, ஹோமம் செய்தோம். ஹோமத்தில் வைக்கப்பட்ட கலசத்தில் பஞ்சகவ்யம் இடப்பட்டு, பின்னர் அது கோயிலை சுற்றிலும் தெளிக்கப்பட்டது. லட்டு தயாரிக்கப்படும் இடம், விநியோகிக்கும் இடம், மலையில் உள்ள வராக சுவாமி கோயில் உள்ளிட்ட பிற கோயில்களிலும் பஞ்சகவ்யம் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது.

பக்தர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இனி கவலைப் படாதீர்கள். தயவுசெய்து திருப்பதி பாலாஜியை தரிசிக்க வாருங்கள், பாலாஜியின் ஆசிர்வாதத்தைப் பெறுங்கள், உங்கள் லட்டுகளை வாங்கி உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x