Published : 23 Sep 2024 11:37 AM
Last Updated : 23 Sep 2024 11:37 AM

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்வது, பார்ப்பது குற்றம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: குழந்தைகள் ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், குழந்தைகள் ஆபாசப் படங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “குழந்தைகள் ஆபாசப் படங்கள் பார்ப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குழந்தைகள் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும். உயர் நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் சட்டப் பிரிவுகளிலும், குழந்தைகள் ஆபாச படங்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக, Child sexual and Exploitative abuse material என்று பயன்படுத்த வேண்டும். இதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.” என்று தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி: சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அவர் மீது அம்பத்தூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்தாண்டு பிறப்பித்திருந்த உத்தரவில், மனுதாரர் தனது மொபைல் போனில் ஆபாச படங்களைப் பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாச படங்களைப் பார்த்ததை மனுதாரரும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், அதில் இருந்து மீள உளவியல் ரீதியிலான சிகிச்சைக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுவாக மொபைல் போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை என்பதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்குற்றம் சாட்ட முடியாது. கேரளாஉயர் நீதிமன்றமும் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்ப்பது தவறு இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

குறிப்பாக 12 முதல்17 வயதுக்குள்ளான பதின்ம வயதினர் ஆபாச படங்களை பார்க்கும் பழக்கத்துக்கு அதிகளவில் அடிமையாகி உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், இவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உளவியல் ரீதியான ஆலோசனைகள் மற்றும் வாழ்வியல் நெறிசார்ந்த கல்வி மூலமாக மீட்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x