Published : 22 Sep 2024 06:52 AM
Last Updated : 22 Sep 2024 06:52 AM
புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துருவ் இலக ரக ஹெலிகாப்டரில் லடாக் பனிமலைப் பகுதிக்கு இரவில் செல்வது குறித்து ராணுவத்தினர் செயல் விளக்கம் அளித்தனர்.
பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோர் பகல், இரவு என வேறுபாடின்றி எப்போதும பணியாற்ற தயார் நிலையில் இருப்பர். காஷ்மீரின் லடாக் பனி மலைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. இங்கு செல்வதற்கு இலக ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ராணுவத்துக்காக இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம்(எச்ஏஎல்) துருவ் என்ற இலக ரக ஹெலிகாப்டரை தயாரித்தது. இந்த ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் இரவு நேரத்தில் லடாக் பனி மலைப் பகுதிக்கு செல்கின்றனர். இது குறித்து சீத்தல் ரக ஹெலிகாப்டரின் பைலட் கூறியதாவது:
ஹெலிகாப்டரில் பகல் நேரத்தில் பறப்பதை விட இரவு நேரத்தில் பறப்பது மிகவும் சவாலான பணி. சூரியன் மறைந்து இருண்டு விட்டால், தொலைவில் உள்ளவை எதுவும் தெரியாது. அதனால் இரவில் பறக்கும்போது, ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருக்கும் உபகரணங்களைத்தான் நாம் அதிகம் சார்ந்திருக்க வேண்டும். இரவு நேரத்தில் பயணம் செய்வதற்கு முன் பலவிதமான விளக்கங்கள் அளிக்கப்படும். செல்ல வேண்டிய இடம், வானிலை குறித்து விளக்கம் அளிக்கப்படும். அதன்பின்பே இரவு நேர பயணத்தை தொடர்வோம்’’ என்றார்.
தொழில்நுட்ப மேற்பார்வையாளர் மேஜர் ஆயுஷ் தேவிஜ்யால் கூறுகையில், ‘‘இரவு நேர பயணத்துக்கு முன்பாக, ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களின் செயல்பாடுகளை சரிபார்க்க வேண்டும். ஹெலிகாப்டரின் இன்ஜினை இயக்கி சோதனை செய்தபின், இன்ஜின் அதிகாரி பறந்து செல்வதற்கு ஒப்புதல் அளிப்பார். மீட்பு பணி, இரவுநேர கண்காணிப்புக்கு இலகு ரக ஹெலிகாப்டர்கள்தான் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT