Published : 22 Sep 2024 04:53 AM
Last Updated : 22 Sep 2024 04:53 AM

லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் எதிரொலி: திருப்பதி கோயிலில் 3 நாட்கள் யாகம் நடத்த முடிவு

திருப்பதி லட்டு

திருப்பதி: திருப்பதி பிரசாதங்களை விலங்கு கொழுப்பு கலந்த நெய் சேர்த்து தயாரித்ததால், ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மகா சாந்தி யாகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கொள்முதல் செய்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்தது.

இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கோயிலின் புதிய நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ் நியமிக்கப்பட்டார். அவர் மேற்கொண்ட ஆய்வில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறைவாக இருப்பதை அறிந்தார்.

அந்த நெய்யை குஜராத் மாநிலம், ஆனந்த் பகுதியில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தார். கடந்த ஜூலை 17-ம் தேதி வந்த பரிசோதனை அறிக்கையில், "நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்துள்ளது. இது தரமற்ற நெய்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முந்தைய ஆட்சியின் கொள்முதல் டெண்டரை சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்தது. கடந்த ஆகஸ்ட் முதல் அனைத்து பிரசாதங்களுக்கும் கர்நாடக அரசின் ‘நந்தினி’ நெய் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஜெகன் ஆட்சியில் திருப்பதி பிரசாதங்கள் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்ட தாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை விநியோகம் செய்ததற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்பது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தலைமையில், 4 ஆகம ஆலோசகர்கள், பிரதான அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர், இணை நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி மற்றும் உயரதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இதற்கிடையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

‘பலமுறை யோசிப்பேன்’ - ஏழுமலையான் விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் கண்டிப்பாக சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். பல நூற்றாண்டுகளாக புகழ்பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புகழைகுலைப்பதற்காகவே இதுபோன்றசெயல்களில் கடந்த ஆட்சியாளர் கள் ஈடுபட்டுள்ளதாக தோன்றுகிறது.

ஏழுமலையான் விஷயத்தில் நான் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பேன். ஒருபோதும் நாங்கள் தவறிழைக்க மாட்டோம். ஜெகன் அரசின் நடவடிக்கையால் பல கோடி பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது. அந்த பக்தர்களில் நானும் ஒருவன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x