Published : 21 Sep 2024 02:31 PM
Last Updated : 21 Sep 2024 02:31 PM
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு பேரிடருக்காக மத்திய அரசின் உதவி கோரி கேரள அரசு தயாரித்த குறிப்பாணை குறித்து ஊடகங்களின் சில பிரிவினர் பொய்யான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ள மாநில முதல்வர் பினராயி விஜயன், இதனை‘அழிவுகரமான இதழியல்’ என்றும் சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் தற்போது அழிவுகரமான இதழியல் நடந்து கொண்டிருக்கிறது. ஊடகங்களில் சில பகுதியினர் சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன. பொய்யான செய்திகளால் கேரள அரசு அவமதிப்புக்குள்ளாகி உள்ளது. ஊடகங்களில் இத்தகைய போலியான தகவல்கள் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து, கேரள அரசு நியாயமற்ற முறையில் உதவிகளைப் பறிக்க முயற்சிப்பதாக ஒரு பொய்யான கதை உருவாகிவிட்டது.
எதிர்க்கட்சிகளும் இந்த அறிக்கைகளை கையில் எடுத்துக்கொண்டன. இந்த கதைகளுக்கு பின்னால் இருக்கும் ஒரே நோக்கம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது மட்டுமே.
பேரிடர்கள் ஏற்படும் போது அதுகுறித்த குறிப்பாணைகளை அமைச்சர்கள் தயாரிப்பது இல்லை. மாறாக அந்தத் துறைகளில் அதிக நிபுணத்துவத்தை நிரூபித்த நிபுணர்களே அதனைத் தயாரிக்கின்றனர்.
அந்த நிபுணர்கள் தயாரித்த தகவல்களை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டன. குறிப்பாணைகளில் உள்ள தரவுகள் மிகைப்படுத்தப்பட்டவை இல்லை. அவை, திட்டமிடப்பட்ட மதிப்பீடுகள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT