Published : 21 Sep 2024 04:54 AM
Last Updated : 21 Sep 2024 04:54 AM

அமெரிக்காவில் பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணம்: உலகளாவிய நிலவரங்கள் குறித்து பைடனுடன் பேச்சு

புதுடெல்லி: அமெரிக்காவுக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி அங்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துஉலக நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்திரி கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மற்றும்அமெரிக்க அதிபர் ஜோ பைடன்தலைமையில் நடைபெறும் இருதரப்பு உயர் அதிகாரிகள் இடையேயான சந்திப்பு சனிக்கிழமை (இன்று)நடைபெறுகிறது. அப்போது விரிவான உலகளாவிய கூட்டாண்மையை முன்னோக்கி கொண்டுசெல்வது குறித்து இரு தலைவர்களும் ஆழமாக விவாதிக்க உள்ளனர். மேலும், இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் செழுமைக்கான (ஐபிஇஎஃப்) மேலும் 2 கூடுதல் தூண்களான தூய்மையான பொருளாதாரம் மற்றும் நியாயமான பொருளாதாரம் - இந்தியா அணுகலை முறைப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களின் பரிமாற்றம் குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படும்.

அமெரிக்க அதிபரின் சொந்த ஊரான டெலாவரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறும் இந்த சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவருடனும் பிரதமர் மோடி சமீபத்தில் நடத்திய சந்திப்புகள் குறித்தும் பைடனிடம் மோடி விரிவாக எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எந்தவித சமாதான முயற்சியையும் முன்மொழியவில்லை. இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

ஒரு திட்டத்தை முன்மொழியும்போது அதில் எந்த அளவுக்கு ஒருமித்த கருத்து எட்டப்படுகிறது என்பதையும், அந்த திட்டத்தை அதிக பார்வையாளர்கள் முன் வைக்கக்கூடிய ஒரு கட்டத்தை எட்ட முடியுமா என்பதையும் பார்க்கவேண்டும். அதற்கு, சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். 14 இந்தோ-பசிபிக் நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐபிஇஎஃப் கூட்டணி, வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள், சுத்தமான பொருளாதாரம் மற்றும் நியாயமான பொருளாதாரம் ஆகிய4 தூண்களை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு தேவையான ஒத்துழைப்பை இந்தியா முறையாக வழங்கும். இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தலைப் பற்றிவிவாதிப்பதுடன், குவாட் கூட்டத்தில் சுகாதார பாதுகாப்பு, காலநிலைமாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எச்ஏடிஆர் உள்கட்டமைப்பு, இணைப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். குவாட் உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர்டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்துப் பேசுவது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதேபோன்று வங்க தேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸை நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் சந்திப்பதும் குறித்தும் இறுதி செய்யப்படவில்லை. நேர மேலாண்மையைக் கொண்டு இதுகுறித்து முடிவெடுக்கப்படும். செப்டம்பர் 22-ம் தேதி நியூயார்க்குக்கு வருகை தரும், பிரதமர் மோடி முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்திப்பதுடன், அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் உரையாற்ற உள்ளார். அடுத்தநாளான திங்களன்று (செப். 23) ஐ.நா. எதிர்கால உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுவார். அப்போது, தற்போதைய உலகளாவிய மோதல்கள் பற்றிய தெற்குலகின் கவலைகளை எடுத்துரைத்து அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான நிலையான வளர்ச்சிக்கான அழைப்பை பிரதமர் விடுப்பார். இவ்வாறு விக்ரம் மிஸ்திரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x