Published : 20 Sep 2024 03:49 PM
Last Updated : 20 Sep 2024 03:49 PM

“ஒமர் அப்துல்லாவுக்கு பாஜக நன்றி சொல்ல வேண்டும்” - பிரதமருக்கு மெகபூபா பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு முக்கிய பங்காற்றிய ஷேக் குடும்பத்தினருக்கு (அப்துல்லாக்கள்) பிரதமர் மோடி நன்றியுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஸ்ரீநகரில் நடந்த கூட்டத்தில் வியாழக்கிழமை பேசிய பிரதமர் மோடி, அரசியல் ஆதாயத்துக்காக பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை, காங்கிரஸ், தேசிய ஜனநாயக கட்சி (என்சிபி), மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை ஆபத்தில் ஆழ்த்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மெகபூபா இவ்வாறு பேசியுள்ளார்.

மெகபூபா கூறுகையில், “ஷேக் குடும்பத்துக்கு, அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பதை சாத்தியமாக்கிய ஷேக் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி நன்றியுடையவராக இருக்க வேண்டும்.

ஒமர் அப்துல்லா வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த போது, ஜம்மு காஷ்மீர் என்பது அரசியல் பிரச்சினை இல்லை மாறாக அது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி தீர்க்கப்பட வேண்டிய தீவிரவாத பிரச்சினை என்று சொல்வதற்காக உலகம் முழுவதும் அழைத்துச் செல்லப்பட்டார்.

சட்டப் பிரிவு 370 சீர்குலைக்கப்படக் கூடாது, ஏஎஃப்எஸ்பிஏ நீக்கப்பட வேண்டும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று நிபந்தனைகளை நாங்கள் முன்வைத்தோம்.

காஷ்மீரின் ஹூரியத்துக்களுடன் பேச்சவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி பாஜவுக்கு தெளிவுபடுத்தியது. இதற்தாக டெல்லியில் இருந்து ஒரு தூதுக்குழு அனுப்பப்பட்டது.

அவர்களே (பாஜக) எங்களைத் தேடி வந்தார்கள். தங்களின் சொந்த நலனுக்காக ஒமர் அப்துல்லாவை அமைச்சராக்கினார்கள். இந்தப் போக்கை அக்கட்சிதான் தொடங்கியது. பின்னர் இப்போது அதில் மாற்றம் ஏன்?” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2015- ம் ஆண்டு பிடிபி - பாஜக கூட்டணி அரசு அமைப்பதற்காக இரண்டு மாதங்கள் வரை பேச்சுவார்த்தை நடந்தது. அதன் விளைவாக, முஃப்தி தலைமையில் 25 பேர் அடங்கிய அமைச்சரவை பதவியேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x