Published : 20 Sep 2024 04:54 AM
Last Updated : 20 Sep 2024 04:54 AM
திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். ஆனால், இந்த லட்டு பிரசாதத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில், விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை உபயோகித்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ் நியமனம் செய்யப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், பதவி பொறுப்பேற்றதும், திருமலையில் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, லட்டு பிரசாதத்தின் தரத்தையும் ஆய்வு செய்தார். அப்போது நெய்யில் கலப்படம் இருப்பதை அறிந்த அவர், அதனை பரிசோதிக்க லேப்புக்கு அனுப்பி வைத்தார். அப்போது நெய்யில் கலப்படம் இருந்ததை அவர் ஊர்ஜிதப்படுத்தினார்.
8.50 லட்சம் கிலோ வீதம் 5 நிறுவனங்களுக்கு டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நிறுவனம் தேவஸ்தானத்திற்கு அனுப்பிய 68 ஆயிரம் கிலோ நெய்யில், 20 ஆயிரம் கிலோ நெய் கலப்படம் செய்யப்பட்ட நெய் என தெரியவந்ததால் அவற்றை திருப்பி அனுப்பி விட்டோம் எனவும், அந்த நிறுவனத்தை பிளாக்லிஸ்ட்டில் வைத்ததோடு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் சியாமள ராவ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து நந்தினி நெய் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஜெகன்மோகன் ஆட்சியில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்புகலந்த நெய் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது அபச்சாரம் அல்லவா?சுவாமியின் பணத்தை கொள்ளை அடித்தனர். சுவாமியின் பிரசாதத்திலும் கலப்படமா? பக்தர்கள் பல முறை இவர்களின் ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதத்தின் தரம்குறைந்து விட்டதாக புகார்கள் தெரிவித்தனர். ஆனால், அவற்றை இவர்கள் கண்டுக் கொள்ள வில்லை.
மேலும் அனைத்து பிரசாதத்திலும் கலப்படம் செய்தனர். தரம்குறைந்த பொருட்களையே உபயோகித்துள்ளனர். தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நெய் கொள்முதல் மாற்றப்பட்டுள்ளது. இந்த தரம்மேலும் உயர்த்தப்படும். ஏழுமலையான் கோயில் நம்முடைய மாநிலத்தில் உள்ளது நம்முடைய அதிருஷ்டமாக பாவிக்கிறேன். அப்படி இருக்கையில், திருமலையின் புனிதத்தை நாம் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும். அது நமது கடமை. இவ்வாறு சந்திரபாபு நாயுடுபேசினார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டை தொடந்து, பல இந்து அமைப்புகள், ஏழுமலையான் பக்தர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா கட்சியினர் ஜெகனுக்கு எதிராகவும், அப்போதைய தேவஸ்தான நிர்வாகிகளுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கிஉள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி, தவறு இழைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
எருமை, பன்றி கொழுப்பு: திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்ததால் ஏதாவது கலப்படம் இருந்திருக்கலாமோ என எண்ணி, ஜெகன் ஆட்சியில் வாங்கப்பட்ட அனைத்து பொருட்களையும், கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி,என்.டி.டி.பி, சிஏஎல் எஃப் லிமிடெட் எனும் டெல்லியில் உள்ளபரிசோதனை மையத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் அனுப்பி வைத்தது. அந்த நிறுவனம் இவற்றை பரிசோதித்து விட்டு, கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி அறிக்கை அனுப்பி வைத்தது.
அதில் லட்டு தயாரிக்க பயன் படுத்தப்பட்ட பசு நெய்யில் சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ், கோதுமை பீன், சோளம், பருத்தி கொட்டையுடன், மீன் எண்ணெய், பாமாயில், பன்றி கொழுப்பு மற்றும் எருமை கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக அறிக்கை வந்துள்ளது. இந்த ஆதாரத்தை வைத்து தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெகன் ஆட்சியில் நடந்த இந்த அநீதி குறித்து அம்பலமாக்கி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT