Published : 19 Sep 2024 05:44 PM
Last Updated : 19 Sep 2024 05:44 PM

“காங்கிரஸும் பாகிஸ்தானும் எப்போதும் ஒரே பக்கம்தான்” - அமித் ஷா விமர்சனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவருவதில் காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் ஒரே நோக்கத்துடனும், ஒரே திட்டத்துடனும்தான் இருக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், "ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி வெற்றி பெற்றால், ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதை அவர்கள் (கூட்டணி) தேர்தல் பிரச்சினையாக்கிவிட்டனர். ஜம்மு - காஷ்மீரில் 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகளை மீட்டெடுக்க பாகிஸ்தானும் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணியும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதனை கண்டிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சட்டப்பிரிவு 370 மற்றும் 35A தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவளித்தது காங்கிரஸை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள நோக்கங்களும் திட்டங்களும் ஒன்றுதான் என்பதை இந்த அறிக்கை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, அனைத்து இந்திய விரோத சக்திகளுடன் ராகுல் காந்தி நின்று, நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறார். வான்வழித் தாக்குதல், சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளுக்கு ஆதாரம் கேட்பது அல்லது இந்திய ராணுவத்தைப் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துகள் கூறுவது என எதுவாக இருந்தாலும், ராகுல் காந்தியின் காங்கிரஸும் பாகிஸ்தானும் எப்போதும் ஒரே பக்கம்தான். காங்கிரஸின் கை எப்போதும் தேச விரோத சக்திகளுடன்தான் இருக்கிறது. ஆனால், காங்கிரஸும் பாகிஸ்தானும் மத்தியில் மோடி அரசு இருப்பதை மறந்துவிடுகின்றன. எனவே, காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவோ அல்லது பயங்கரவாதமோ திரும்பப் போவதில்லை" என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x