Published : 19 Sep 2024 05:11 PM
Last Updated : 19 Sep 2024 05:11 PM

“ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்” - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்): தூய்மையான, ஆரோக்கியமான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் இன்று (செப். 19) நடைபெற்ற தூய்மைப் பணியாளர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "நமது தூய்மைப் பணி நண்பர்கள் முன்வரிசை தூய்மைப் போராளிகள். நோய்கள், அழுக்கு மற்றும் சுகாதார அபாயங்களிலிருந்து அவர்கள், நம்மைப் பாதுகாக்கின்றனர். தேச நிர்மாணத்தில் அவர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர். உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் தூய்மைத் துறையில் நாம் செய்த சாதனைகளுக்கான மிகப்பெரிய பெருமை நமது தூய்மைப் பணியாளர் நண்பர்களையே சாரும்.

தூய்மைப் பணி நண்பர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நலனை உறுதி செய்வது அரசு மற்றும் சமுதாயத்தின் முக்கியப் பொறுப்பு. ஆட்குழியை அகற்றி, இயந்திர துளைகள் மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ், தூய்மைப் பணியாளர்கள் பயனடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியாளர் பாதுகாப்பு முகாம்கள் மூலமாகவும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டம் 2025-ம் ஆண்டு வரை தொடரும். முழுமையான தூய்மை என்ற இலக்கை நாம் அடைய வேண்டும். 'திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லை' என்ற நிலையை பராமரிக்கும் அதே வேளையில், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையில் தேசிய இலக்குகளை அடைய வேண்டும்.

தூய்மை, தூய்மைப் பண்பு என்ற செய்தியை நாடு முழுவதும் பரப்பும் இயக்கம் நடைபெற்று வருகிறது. அழுக்குகளையும், குப்பைகளையும் அகற்றி பாரத அன்னைக்கு சேவை செய்ய, மக்கள் உறுதிமொழி எடுத்து வருகின்றனர். தூய்மை இந்தியா இயக்கத்தை ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் முன்னெடுத்துச் செல்லவும், இந்த இயக்கத்திற்காக உடலுழைப்பு வழங்கவும் குடிமக்கள் அனைவரும் முன்வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இதைச் செய்வதன் மூலம், தேசப் பிதா மகாத்மா காந்தியின் தூய்மை தொடர்பான கொள்கைகளை நம்மால் நடைமுறைப்படுத்த முடியும். தூய்மையை நோக்கிய நமது ஒரு அடி, நாடு முழுவதையும் தூய்மையாக வைத்திருப்பதில் மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தூய்மையான இந்தியா, ஆரோக்கியமான இந்தியா மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x