Published : 19 Sep 2024 02:25 PM
Last Updated : 19 Sep 2024 02:25 PM
ஸ்ரீநகர்: முதற்கட்டத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பதன் மூலம் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாற்றை படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீநகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) உரையாற்றினார். அப்போது அவர், “இன்று நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்திருக்கிறீர்கள். இளைஞர்களின் இந்த உற்சாகம், பெரியவர்கள் மற்றும் ஏராளமான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பார்வையில் உள்ள அமைதி ஒரு செய்தியை தெரிவிக்கிறது. இது புதிய காஷ்மீர் என்பதுதான் அந்த செய்தி. ஜம்மு காஷ்மீரின் விரைவான முன்னேற்றமே நம் அனைவரின் நோக்கமாகும்.
ஜம்மு காஷ்மீரின் விரைவான முன்னேற்ற உணர்வை உயர்த்தும் செய்தியுடன் இன்று நான் உங்கள் மத்தியில் வந்துள்ளேன். ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தின் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று 7 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. முதன்முறையாக இந்த வாக்குப்பதிவு பயங்கரவாதத்தின் நிழல் இல்லாமல் நடந்தது. இவ்வளவு பெரிய அளவில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்களித்தது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
கிஷ்த்வாரில் 80% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன, தோடாவில் 71% க்கு மேல் பதிவாகியுள்ளது. ரம்பானில் 70% க்கும் அதிகமான வாக்குகளும், குல்காமில் 62% க்கும் அதிகமான வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் பல தொகுதிகளில் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதன் மூலம், புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரலாற்றை ஜம்மு காஷ்மீர் மக்கள் உருவாக்கியுள்ளனர். இன்று, ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தியாவின் ஜனநாயகத்தை எப்படி பலப்படுத்துகிறார்கள் என்பதை உலகமே பார்க்கிறது. இதற்காக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் வந்தபோது, ஜம்மு காஷ்மீரின் அழிவுக்கு மூன்று குடும்பங்கள்தான் காரணம் என்று கூறியிருந்தேன். அப்போதிருந்து, டெல்லி முதல் ஸ்ரீநகர் வரை, அந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பீதியில் உள்ளனர். அவர்களை எப்படிக் கேள்வி கேட்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எப்படியாவது நாற்காலியைப் பிடித்து உங்கள் அனைவரையும் கொள்ளையடிப்பது அவர்களின் பிறப்பு உரிமை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மக்களின் நியாயமான உரிமைகளைப் பறிப்பதே அவர்களின் அரசியல் செயல்திட்டம்.
ஜம்மு காஷ்மீருக்கு பயத்தையும், அராஜகத்தையும் மட்டுமே அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் இனி ஜம்மு காஷ்மீர் இந்த மூன்று குடும்பங்களின் பிடியில் இருக்காது. ஜம்மு காஷ்மீரை தீவிரவாதத்தில் இருந்து விடுவிக்க, ஜம்மு காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும்.
இந்த 3 குடும்பங்களால் நமது தலைமுறை அழிய விடமாட்டேன். இங்கு அமைதியை நிலைநாட்ட மனப்பூர்வமாக செயல்பட்டு வருகிறேன். இன்று, ஜம்மு காஷ்மீர் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சீராக இயங்குகின்றன. குழந்தைகளின் கைகளில் பேனா, புத்தகங்கள், மடிக்கணினிகள் உள்ளன. இன்று பள்ளிகளில் தீ விபத்து பற்றிய செய்திகள் இல்லை. மாறாக, இன்று புதிய பள்ளிகள், புதிய கல்லூரிகள், எய்ம்ஸ், மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி. போன்ற செய்திகளை அதிகம் கேட்க முடிகிறது.
இந்த மூன்று குடும்பங்களும் ஜம்மு காஷ்மீர் அரசியலை தங்கள் சொத்தாகக் கருதுகின்றனர். தங்கள் குடும்பத்தைத் தவிர, வேறு யாரையும் முன்னேற அனுமதிக்க மாட்டார்கள். அவர்களின் சுயநலத்தின் விளைவுதான் இங்குள்ள இளைஞர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் இந்த மூன்று குடும்பங்கள்தான் வரவேண்டும் என எண்ணினர்.
முந்தைய சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது இப்போது நிலைமை மாறிவிட்டது. இன்று நள்ளிரவு வரை பிரச்சாரம் நடந்து வருகிறது. இன்று மக்கள் ஜனநாயகத்தை கொண்டாடுகிறார்கள். இங்குள்ள இளைஞர்கள் தங்கள் வாக்குகளால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் லால் சவுக்கிற்கு வந்து இங்கு மூவர்ணக்கொடியை ஏற்றுவது உயிருக்கு ஆபத்தான ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளாக மக்கள் லால் சவுக்கிற்கு வரவே அஞ்சினார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இப்போது ஈத் பண்டிகை மற்றும் தீபாவளி இரண்டின் சிறப்பையும் ஸ்ரீநகரின் சந்தைகளில் காணலாம். இப்போது லால் சௌக் சந்தை மாலை வரை சுறுசுறுப்பாக இயங்குகிறது. நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.
நமது காஷ்மீரி பண்டிதர்கள் காஷ்மீரியத்தை வளர்ப்பதிலும் முன்னேற்றுவதிலும் பெரும் பங்காற்றியுள்ளனர். ஆனால் மூன்று குடும்பங்களின் சுயநல அரசியல், காஷ்மீரி இந்துக்களை வீடற்றவர்களாக ஆக்கியது. நமது சீக்கிய குடும்பங்களும் ஒடுக்கப்பட்டன. காஷ்மீரி இந்துக்கள் மற்றும் சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒவ்வொரு அட்டூழியத்திலும் இந்த மூன்று குடும்பங்களும் பங்கு பெற்றிருந்தன. காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி - மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை மட்டுமே பிரிவினையை உருவாக்கின” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT