Last Updated : 19 Sep, 2024 05:17 AM

 

Published : 19 Sep 2024 05:17 AM
Last Updated : 19 Sep 2024 05:17 AM

வங்கதேச அணி இந்தியாவில் விளையாட அனுமதிக்க கூடாது: இந்து மகாசபா, சர்ச்சை துறவி நரசிம்மானந்தா எச்சரிக்கை

யத்தி நரசிம்மானந்தா

புதுடெல்லி: கிரிக்கெட் விளையாட இந்தியாவந்துள்ள வங்கதேச ஆண்கள்அணிக்கு எதிர்ப்பு வலுக்கிறது. வட மாநிலங்களில் இவர்கள்விளையாட இந்து மகாசபாவினரும், உத்தர பிரதேசத்தின் சர்ச்சை சாது யத்தி நரசிம்மானந்தாவும் எச்சரித்துள்ளார்.

கடந்த மாதம் வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் அரசு ஆகஸ்ட் 5 -ல் ஆட்சியை இழந்தது. இந்த கிளர்ச்சியில் வங்கதேசத்தின் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்களின் கிளர்ச்சியில் உயிர்தப்பிய அந்நாட்டின் பிரதமர்ஷேக் ஹசீனா தன் குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கு இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் டெஸ்ட் மேட்ச் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட வங்கதேச அணி சென்னை வந்துள்ளது. இவர்கள், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 12 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விளையாட உள்ளனர். சென்னையைத் தொடர்ந்து உ.பி.யின் கான்பூர், டெல்லி, மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வங்கதேச அணி விளையாடுகிறது. இதற்கு தற்போது எதிர்ப்பு வலுக்க துவங்கி உள்ளது.உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்திலுள்ள தாஸ்னாவின் சிவசக்திமடத்தின் தலைவரான துறவி யத்திநரசிம்மானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மஹாமண்டலேஷ்வர் பட்டம் பெற்ற இவர், சிறுபான்மையினருக்கு எதிராக அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளை கூறி வழக்கில் சிக்கி வருகிறார்.

வங்கதேச அணி குறித்து துறவி நரசிம்மானந்தா கூறுகையில், “வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடர்கிறது. இந்தநிலையில், சிறிதும் வெட்கம் இன்றி வங்கதேச அணியை இந்தியாவில் விளையாட அனுமதிப்பதை ஏற்க முடியாது. இந்த போட்டியை ஜெய்ஷா தலைமையிலான பிசிசிஐ நடத்துகிறது. இதற்கு மேல் இந்துக்களை அவமதிக்க முடியாது. எனவே, டெல்லி, கான்பூர்போட்டிகளை நடத்த விட மாட்டோம்" என்றார். வங்கதேச அணியை எதிர்க்கும் மற்றொரு இந்துத்துவா அமைப்பான இந்து மகாசபாவின் துணைத் தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் கூறும்போது, "வங்கதேசத்தில் இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வங்கதேசத்தினரை குவாலியரில் விளையாடுவதை தடுப்போம்" என்றார்.

இது குறித்து பிசிசிஐக்கு மற்றொரு இந்துத்துவா அமைப்பான ஜனஜாக்ரிதி சமிதி என்ற அமைப்பும் கடிதம் எழுதியுள்ளது. அதில், இந்துக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரை அந்நாட்டினர் யாரையும் இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கிரிக்கெட் ரசிகர்களின் ஒருபகுதியினர் வங்கதேசத்தை விளையாட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி பிசிசிஐயிடம் மனு அளித்திருந்தனர். வங்கதேச போட்டி குறித்து, மகராஷ்டிராவின் எதிர்கட்சியான சிவசேனாவின்யுபிடி பிரிவின் தலைவர் ஆதித்யதாக்கரேவும் மத்திய வெளியுறத்துறையை விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x