Published : 18 Sep 2024 10:22 PM
Last Updated : 18 Sep 2024 10:22 PM

“ஜெகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு” - சந்திரபாபு நாயுடு ‘பகீர்’ குற்றச்சாட்டு

திருப்பதி: முந்தைய ஜெகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் இன்று (செப்.18) மாலை முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

பின்னர் இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புனிதமானது. ஆனால் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் வெட்கப்பட வேண்டும்.

திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்” என்று தெரிவித்தார். சந்திரபாபு முன்வைத்த இந்த குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது மட்டுமின்றி சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க தரமற்ற நெய் வழங்கியதாக திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x