Published : 18 Sep 2024 08:33 PM
Last Updated : 18 Sep 2024 08:33 PM
புதுடெல்லி: நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 என்று பெயரிடப்பட்ட பயணத்துக்கு ஒப்புதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது.
இந்த சந்திரயான்-4 விண்கலம், நிலவில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இதை 2040-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்), 2040-க்குள் சந்திரனில் இந்தியா அமிர்த கால இந்திய விண்வெளித் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான தொலைநோக்குப் பார்வையை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்க, விண்வெளிப் பயண உள்கட்டமைப்பு திறன்களை மேம்படுத்துவது உட்பட தொடர்ச்சியான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. விண்கலத்தை உருவாக்கி, செலுத்தும் பணியை இஸ்ரோ மேற்கொள்ளும். இத்திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைமுறையில் உள்ள நடைமுறைகள் மூலம் திறம்பட நிர்வகிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். சந்திரயான்-4 விண்கலத்தை விண்ணில் செலுத்த ரூ.2,104.06 கோடி நிதி தேவைப்படுகிறது.
இந்த செலவில் விண்கல மேம்பாடு, உணர்தல், எல்விஎம் 3-ன் இரண்டு ஏவு வாகன பயணங்கள், வெளிப்புற ஆழமான விண்வெளி நெட்வொர்க் ஆதரவு, வடிவமைப்பு சரிபார்ப்புக்கான சிறப்பு சோதனைகளை நடத்துதல், இறுதியாக சந்திர மேற்பரப்பில் தரையிறங்குதல், சேகரிக்கப்பட்ட சந்திர மாதிரியுடன் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புதல் ஆகியவை அனைத்தும் அடங்கும். மனிதர்களை அனுப்புவதற்கான முக்கியமான அடிப்படை தொழில்நுட்பங்கள், சந்திர மாதிரி திரும்பப் பெறுதல், சந்திர மாதிரிகளின் அறிவியல் பகுப்பாய்வு ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற இந்த இயக்கம் உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விண்வெளி நிலையம்: அதேபோல், ககன்யான் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், பாரதிய விண்வெளி நிலையத்தின் முதல் பிரிவை உருவாக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாரதிய விண்வெளி நிலையத்தின் (பிஏஎஸ்-1) முதல் தொகுதியை மேம்படுத்தவும், கட்டமைப்பதற்கும், இயக்குவதற்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் செய்து சரிபார்க்கும் இயக்கங்களை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாரதிய விண்வெளி நிலையம் மற்றும் முன்னோடி இயக்கங்களுக்கான புதிய மேம்பாடுகள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள ககன்யான் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான கூடுதல் தேவைகளை உள்ளடக்கும் வகையில் ககன்யான் திட்டத்தின் நோக்கம் மற்றும் நிதியுதவியை மாற்றியமைத்தல் இதில் அடங்கும்.
ககன்யான் திட்டத்தில் திருத்தம், பாரதிய விண்வெளி நிலையத்திற்கான வளர்ச்சி மற்றும் முன்னோடி இயக்கங்களின் நோக்கத்தை உள்ளடக்கியது. மேலும், ஒரு கூடுதல் ஆளில்லா இயக்கம் மற்றும் தற்போதைய ககன்யான் திட்டத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் வன்பொருள் தேவைகளை கருத்தில் கொண்டது. இப்போது தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயல்விளக்கத்தின் மனித விண்வெளிப் பயணத் திட்டம், எட்டு பயணங்கள் மூலம் பாரதிய விண்வெளி நிலையம்-1-ன் முதல் அலகு ஏவுவதன் மூலம் 2028 டிசம்பருக்குள் முடிக்கப்பட உள்ளது.
2018 டிசம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ககன்யான் திட்டம், மனிதர்களை குறைந்த புவி வட்டப்பாதைக்கு (LEO) அனுப்பவும், நீண்ட கால அடிப்படையில் இந்திய மனித விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களுக்கு அடித்தளம் அமைக்கவும் வகை செய்கிறது. 2035-ம் ஆண்டுக்குள் செயல்படும் பாரதிய விண்வெளி நிலையத்தை உருவாக்குவது, 2040-க்குள் இந்திய விண்வெளி இயக்கம் ஆகியவற்றை உருவாக்குவது என்பது அமிர்த காலத்தில் விண்வெளிக்கான தொலைநோக்கு பார்வையில் அடங்கும். அனைத்து முன்னணி விண்வெளி பயண நாடுகளும் நீண்ட கால மனித விண்வெளி பயணங்களுக்கும், சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் மேலும் ஆய்வு செய்வதற்கும் தேவையான திறன்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் கணிசமான முயற்சிகளையும் முதலீடுகளையும் செய்து வருகின்றன.
ககன்யான் திட்டம் என்பது இஸ்ரோவின் தலைமையில் தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் பிற தேசிய முகமைகளுடன் பங்குதாரர்களாக செயல்படும் ஒரு தேசிய முயற்சியாக இருக்கும். இஸ்ரோவில் நிறுவப்பட்ட திட்ட மேலாண்மை பொறிமுறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். நீண்ட கால மனித விண்வெளி பயணங்களுக்கான முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்கி நிரூபிப்பதே இலக்கு.
இந்த இலக்கை அடைய, இஸ்ரோ 2026 ஆம் ஆண்டுக்குள் நடைபெற்று வரும் ககன்யான் திட்டத்தின் கீழ் நான்கு திட்டங்களையும், 2028 டிசம்பருக்குள் பாரதிய விண்வெளி நிலைய அமைப்பின் முதல் தொகுதி மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களை சரிபார்ப்பதற்கான நான்கு இயக்கங்களையும் மேற்கொள்ளும். ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தில் ரூ.11,170 கோடி நிகர கூடுதல் நிதியுடன், திருத்தப்பட்ட நோக்கத்துடன் ககன்யான் திட்டத்துக்கான மொத்த நிதி ரூ.20,193 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT