Published : 18 Sep 2024 04:21 PM
Last Updated : 18 Sep 2024 04:21 PM
புதுடெல்லி: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு சமர்ப்பித்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை இன்று (செப்.18) ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இது தொடர்பான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை அமைச்சரவையின் முன் வைப்பது, சட்ட அமைச்சகத்தின் 100 நாள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்தது. குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்காக ‘செயல்படுத்தும் குழு’ ஒன்றை அமைக்கவும் குழு முன்மொழிந்தது.
ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் வளங்களைச் சேமிக்கவும், வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், "ஜனநாயகக் கொள்கையின் அடித்தளங்களை" ஆழப்படுத்தவும், "இந்தியா, அதுவே பாரதம்" என்பதை நனவாக்கவும் உதவும் என்று குழு கூறியுள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்திய தேர்தல் ஆணையம் பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைத் தயாரிக்கவும் இக்குழு பரிந்துரைத்தது.
தற்போது, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுள்ளது. அதே நேரத்தில் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையங்கள் நடத்துகின்றன. இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான உயர்மட்டக் குழு, 18 அரசியலமைப்பு திருத்தங்களை பரிந்துரைத்தது. அவற்றில் பெரும்பாலான திருத்தங்களுக்கு மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புதல் தேவையில்லை. இருப்பினும், இவற்றுக்கு சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் தேவைப்படும். அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் ஒற்றை வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சில முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு குறைந்தது பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது குறித்த தனது அறிக்கையை சட்ட ஆணையம் விரைவில் கொண்டு வர வாய்ப்புள்ளது.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் ஏற்பட்டால், ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பின்புலப் பார்வை: கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது தேர்தல் நடைபெறுவதால் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதால் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைக்கும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்தை தேசியச் சட்ட ஆணையம் கேட்டறிந்தது. அப்போது, இந்தத் திட்டத்தில் விடை காண வேண்டிய கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன என்ற வாதமும் முன்வைக்கப்பட்டன. இந்தத் திட்டம் குறித்து ஜனவரி 19, 2023-ல் ‘இந்து தமிழ் திசை’யில் வெளிவந்த தலையங்கம் பகுதியில் இருந்து...
1967 வரை மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. அதற்குப் பிறகு சில மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் மக்களவைக்கும் பல மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் வெவ்வேறு நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.
1983-ம் ஆண்டிலும் , 1999-ம் ஆண்டிலும் மீண்டும் பழைய நடைமுறைக்குத் திரும்புவதற்கான சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டன. 2014 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகளில் ஒன்றாக இது இடம்பெற்றது. 2016-இல் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2018-இல் தேசியச் சட்ட ஆணையம் இது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்கத் தொடங்கியது.
ஆனால், அப்போதும் அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையைப் பெற முடியவில்லை. தேர்தல் செலவு குறையும், ஆளும் கட்சிகள் தேர்தல் நேரப் பணிகளைக் குறைத்து, நலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடியும், வாக்குப்பதிவு அதிகரிக்கும், வேட்பாளர்கள் கறுப்புப் பணத்தையும் ஊழல் பணத்தையும் தேர்தலுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியும் என இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் பல வாதங்களில் நியாயமில்லாமல் இல்லை.
ஆனால், இதற்காகச் சில மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக் காலத்தைக் குறைக்கவும் சில மாநிலங்களில் நீட்டிக்கவும் வேண்டியிருக்கும். அதற்கேற்ப அரசமைப்புச் சட்டத்திலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையைப் பெற வேண்டும். அது அத்தனை எளிதல்ல. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் திமுக இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலத்துக்கு முன்பாகவே கலைப்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு முரணானதாகக் கருதப்படும். மேலும், ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது தேசியக் கட்சிகளுக்கே சாதகமானது என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுவதும், இத்திட்டம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியிருப்பதும் புறக்கணிக்கத்தக்க கருத்துகள் அல்ல.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படும் அவசரத்தால் மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் அதிகரிப்பதையும், பிரிவினைவாத சக்திகள் வலுவடைவதையும் தவிர்க்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. எனவே, அனைத்து சாதக பாதகங்களையும் ஆராய்ந்து, அனைத்து அரசியல்கட்சிகளிடம் கருத்தொற்றுமையை உருவாக்கிய பிறகே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...