Published : 18 Sep 2024 03:15 PM
Last Updated : 18 Sep 2024 03:15 PM
புதுடெல்லி: ராகுல் காந்திக்கு எதிராக பாஜக, சிவ சேனா தலைவர்கள் பேசியதற்கு கண்டனம் தெரிவத்து தெலங்கானா, கர்நாடகா உள்பட நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் தர்விந்தர் சிங் மார்வா, ரவ்நீத் சிங் பிட்டு, ரகுராஜ் சிங், சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.எஸ் ஷர்மிளா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். பாஜகவுக்கு எதிராகவும், அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றுகூடி, தர்விந்தர் சிங் மார்வா, ரவ்நீத் சிங் பிட்டு, ரகுராஜ் சிங், சஞ்சய் கெய்க்வாட் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக பிஹாரில் பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மோடிக்கு எதிராகவும், தர்விந்தர் சிங் மார்வா, ரவ்நீத் சிங் பிட்டு, ரகுராஜ் சிங், சஞ்சய் கெய்க்வாட் ஆகியோருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இந்த பேரணிக்கு பிஹார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அகிலேஷ் பி சிங் தலைமை தாங்கினார். ராகுல் காந்திக்கு எதிரான இதுபோன்ற கருத்துக்கள் மன்னிக்க முடியாதவை என தெரிவித்த அவர்கள், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட், "எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தலைவர்கள் தரக்குறைவான கருத்துக்களை கூறி வருகின்றனர். இது குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தலைவர் ஆகியோர் மவுனம் சாதிக்கின்றனர். அரசியலில் அன்பு மற்றும் சகோதரத்துவம் பற்றி ராகுல் காந்தி பேசுகிறார். நரேந்திர மோடி மீது எனக்கு வெறுப்பு இல்லை என்று அவர் கூறுகிறார். இருந்தும் பாஜக தலைவர்கள் வன்முறையாகப் பேசுகிறார்கள்.
மவுனமாக இருப்பதால், இவையனைத்தும் இவர்களது ஆலோசனைகளின்படிதான் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற வன்முறை கருத்துகளை ஏற்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
முன்னதாக, ராகுல் காந்திக்கு எதிராக கடுமையாகப் பேசிய பாஜக மற்றும் சிவ சேனா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. டெல்லி துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த காங்கிரஸ் பொருளாளரும், பொதுச் செயலாளருமான அஜய் மாக்கன், “மறைந்த இந்திரா காந்தி மற்றும் மறைந்த ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதன் பிறகும் இதுபோன்ற மிரட்டல்களை அவர்கள் விடுக்கிறார்கள். இந்திய அரசியலை இதைவிட கீழ் நிலைக்கு தள்ள முடியாது.
வெறும் ஒரு பாஜக தலைவர் மட்டுமல்ல, பல தலைவர்கள் இதுபோன்ற கருத்துகளைச் சொன்னார்கள். ஆனால் பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராகுல் காந்தி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகிறார். அதனால்தான் பாஜகவினர் அவருடைய வார்த்தைகளை விரும்பவில்லை. அதனால் தான் அவரை மிரட்டுகின்றனர். ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன் - இது காங்கிரஸ் கட்சி, நாங்கள் பயப்படவோ அஞ்சவோ மாட்டோம்” என தெரிவித்தார்.
அஜய் மாக்கன் அளித்த புகார் மனுவில், “செப்டம்பர் 11 அன்று, பாஜக நிகழ்ச்சியில் பேசிய தர்விந்தர் சிங் மார்வா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள், இல்லையெனில் உங்கள் பாட்டிக்கு நேர்ந்த கதியை நீங்கள் சந்திப்பீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, ராகுல் காந்தியை “நாட்டின் நம்பர் ஒன் பயங்கரவாதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை பாஜகவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங்கும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும், வன்முறையை தூண்டும் நோக்கிலும் ராகுல் காந்திக்கு எதிராக வேண்டுமென்றே இவர்கள் இவ்வாறு பேசி உள்ளனர். இவர்களின் இந்த கருத்துக்கள் டிவி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகி உள்ளது.
பெண்கள், இளைஞர்கள், தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினர் போன்ற சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் தொடர்பான பிரச்சினைகளை ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பி வருகிறார். இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு பாஜக தீர்வு காணத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார்.
அவரது இத்தகைய விமர்சனத்தை ஏற்க முடியாத பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் மீது இதுபோன்ற வெறுப்பு நிறைந்த கருத்துக்களைக் கூறுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்.
எனவே, BNS-ன் 351, 352, 353, 61 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT