Published : 18 Sep 2024 02:02 PM
Last Updated : 18 Sep 2024 02:02 PM

‘மே.வங்கம் மோசம்; தென் மாநிலங்களில் முன்னேற்றம்’ - பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் பொருளாதாரம் பல பத்தாண்டுகளாக மோசமாகவே உள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட கணிசமாக முன்னேறியுள்ளன என்றும், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களும் தற்போது (2023-24 இல்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30% பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1960-61 முதல் 2023-24 வரையிலான நிதி ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலங்களின் பொருளாதார செயல்பாடு குறித்த ஆய்வறிக்கையை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த (EAC-PM) சஞ்சீவ் சன்யால், ஆகான்க்ஷா அரோரா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வறிக்கையில், நாட்டின் கிழக்குப் பகுதியின் வளர்ச்சி கவலைக்குரியதாகவே உள்ளது என்றும், குறிப்பாக மேற்கு வங்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனி நபர் வருவாய் வெகுவாக சரிந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960-61ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் பங்கு 10.5% ஆக இருந்த நிலையில், அது தற்போது (2023-24ல்) 5.6% ஆக சரிந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், தனி நபர் வருவாயில் 1960-61ல் 3வது இடத்தில் மேற்கு வங்கம் இருந்ததாகவும், அப்போது தேசிய சராசரியைவிட மேற்கு வங்கத்தின் சராசரி 127.5% ஆக இருந்ததாகவும், அது தற்போது (2023-24ல்) 83.7% ஆக சரிந்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை எட்டி உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 1960-61ல் 8.7% ஆக இருந்ததாகவும், அது தற்போது (2023-24ல்)8.9% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் வருவாயைப் பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் சராசரி 1960-61ல் 109.2% ஆக இருந்த நிலையில் அது தற்போது (2023-24ல்) 171.1% ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொருத்தவரை, தற்போது (2023-24-ல்) குஜராத்தின் பங்கு 8.1% ஆகவும், மகாராஷ்டிராவின் பங்கு 13.3% ஆகவும், உத்தரப் பிரதேசத்தின் பங்கு 9.5% ஆகவும், கர்நாடகாவின் பங்கு 8.2% ஆகவும், கேரளாவின் பங்கு 3.8% ஆகவும், ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பங்கு 9.7% ஆகவும் உள்ளது.

தனி நபர் வருவாயில் தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தற்போது (2023-24ல்) குஜராத் 160.7% ஆகவும், மகாராஷ்டிரா 150.7% ஆகவும், உத்தரப்பிரதேசம் 171.1% ஆகவும், கர்நாடகா 180.7% ஆகவும், கேரளா 152.5% ஆகவும், ஆந்திரா 131.6% ஆகவும், தெலங்கானா 193.6% ஆகவும் காணப்படுகிறது.

கடல்சார் மாநிலங்களில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்கள் சிறந்து விளங்கியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991 இல் கொண்டுவரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு தென் மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட கணிசமாக முன்னேறியுள்ளன என்றும், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களும் தற்போது (2023-24 இல்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30% பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x