Published : 18 Sep 2024 12:28 PM
Last Updated : 18 Sep 2024 12:28 PM
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் பெயர், புகைப்படத்தை விக்கிப்பீடியா நீக்கியுள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து விக்கிப்பீடியாவின் தாய் நிறுவனமான விக்கிமீடியா அறக்கட்டளை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. பொதுவாக விக்கிப்பீடியாவில் பதிவாகும் கட்டுரைகளை விக்கிமீடியா அறக்கட்டளை திருத்தவோ அல்லது சென்சார் செய்வதோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது கொள்கை ரீதியிலான முடிவு.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக அறக்கட்டளை சார்பில் பிரதிநிதி ஒருவர் பயனர்கள் கலந்து கொண்ட விவாதத்தில் பங்கேற்றார் என்றும். அதில் கொல்கத்தா சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெயரை கட்டுரையில் குறிப்பிட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினார். இதையடுத்து தன்னார்வ எடிட்டர் ஒருவர் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. விக்கிப்பீடியா தளத்தில் உள்ள இந்தக் கட்டுரை இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.22-க்கு கடைசியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
“கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் பெயரை குறிப்பிட்டது குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவு எங்கள் பார்வைக்கு கிடைத்தது. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரின் பெயர் போன்ற விவரத்தை வெளியிடும் போது சில வழக்குகளில் அவரின் குடும்பத்தினர் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பொதுவாக விக்கிப்பீடியா தள கட்டுரை சார்ந்து எழும் விவகாரங்களுக்கு தன்னார்வலர்கள் தான் பதில் தருவார்கள். விக்கிமீடியா அறக்கட்டளைக்கு கன்டென்ட் குறித்து ஏதேனும் புகார் வந்தால், அது குறித்து விக்கிப்பீடியாவின் தன்னார்வ தளத்தில் கேள்வி எழுப்புவோம். அதோடு கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அந்த சிக்கலுக்கு தீர்வு காண செய்வோம்.
விக்கிமீடியா அறக்கட்டளை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும் பிற நாடுகளில் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்போம். அந்த வகையில் இது போல நீதிமன்ற சிக்கல்கள் எழும்போது அதற்கு எளிதில் தீர்வு காண முடியும் என நம்புகிறோம்.” என விக்கிமீடியா அறக்கட்டளையின் ஜோ சுதர்லாந்த் தெரிவித்துள்ளார்.
நம்மில் பலருக்கும் விக்கிப்பீடியா கட்டுரைகள் பல்வேறு தருணங்களில் உதவி இருக்கலாம். கல்லூரியில் அசைன்மென்ட் செய்வதில் துவங்கி பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்வது வரை அது நீள்கிறது.
இன்றைய இணைய உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை இலவசமாக அறிந்து கொள்ள உதவுகிறது தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியோ. சுமார் 58 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், 300 மொழிகளில் தகவல்கள் மற்றும் மாதந்தோறும் சுமார் 16 பில்லியன் வியூஸ் என விக்கிப்பீடியாவின் இயக்கம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT