Published : 18 Sep 2024 10:46 AM
Last Updated : 18 Sep 2024 10:46 AM

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை

கோப்புப்படம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் அமைந்துள்ள மோங்பங் மெய்டேய் கிராமத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு கிராமத்தில் உள்ள தன்னார்வலர்கள் பதில் தாக்குதல் கொடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று தகவலும் வெளியாகி உள்ளது.

காவல் துறையினருக்கு துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்ததும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் அங்கு நிலவும் பதற்ற சூழலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். அதன் பின்னர் அங்கு துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் படையினருக்கு உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் போலீஸார் வலியுறுத்தி உள்ளனர். அதோடு அங்கு தீவிர கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் ட்ரோன்கள் பறந்ததாக கிராம மக்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை கிழக்கு இம்பால் பகுதியில் உள்ள கிராமத்தில் மேற்கொண்ட சோதனையில் வெடிமருந்து, துப்பாக்கி தோட்டாக்கள் போன்றவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குக்கி ஸோ சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. அப்போது முதல் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x