Published : 18 Sep 2024 05:28 AM
Last Updated : 18 Sep 2024 05:28 AM
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையில் இந்த திட்டத்தை வலியுறுத்தி இருந்தார். அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்நிலையில் ஒரே நாடு ஒரேதேர்தல் திடத்துக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் லோக்ஜனசக்தியும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பெருமளவில் வரிப் பணம்: இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1967 வரை மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் அதை நோக்கி செல்லும் பாஜகவின் திட்டம் விரைவான வளர்ச்சிஇலக்குகளுக்கு உகந்ததாக இருக்கும். அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்தில் தடைகளை உருவாக்கியது. ஏனெனில் அவற்றை நடத்துவதற்கு பெருமளவில் வரிப் பணம் செலவிடப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் முழு ஆதரவு அளிக்கிறது. இதன் மூலம், அடிக்கடி நடைபெறும் தேர்தல்களில் இருந்து நாடு விடுபடுவது மட்டுமின்றி, ஸ்திரமான கொள்கைகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான சீர்திருத்தங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தும்” என்று கூறியுள்ளார்.
இதுபோல் லோக் ஜன சக்தியின் தேசிய பொதுச் செயலாளர் அஜய் பாண்டே கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். ஆண்டு முழுவதும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறுவதால் அரசுக்கு அதிகசெலவு ஏற்படுவது மட்டுமின்றி அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பாதிக்கப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT