Published : 18 Sep 2024 04:57 AM
Last Updated : 18 Sep 2024 04:57 AM
புதுடெல்லி: டெல்லியின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள ஆதிஷியை விமர்சித்த விவகாரத்தில் அதிருப்தி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். முன்னதாக டெல்லியின் அடுத்த முதல்வராக கல்வி அமைச்சர் ஆதிஷி அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி யின் அதிருப்தி எம்.பி. ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “டெல்லிக்கு இன்றுமிகவும் சோகமான நாள். தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்படாமல் அவரை காப்பாற்றுவதற்காக ஒரு குடும்பம் நீண்ட போராட்டம் நடத்தியது. அந்த குடும்பத்தில் இருந்துவந்த ஒரு பெண்தான் டெல்லிமுதல்வர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். அப்சல் குருவை காப்பாற்ற அவரது பெற்றோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். அவர்களை பொறுத்த வரை அப்சல் குரு ஒரு அப்பாவி. ஆதிஷி வெறும் ‘டம்மி' முதல்வர் தான் என்றாலும் இந்த விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது. கடவுள் டெல் லியை பாதுகாக்கட்டும்’’ என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் திலீப் பாண்டே கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சி மூலம் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்வாதி மாலிவால், பாஜகவின் சொல்படி எதிர்வினையாற்றுகிறார். அவ ருக்கு துளியும் வெட்கமிருந்தால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவிட்டு, பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் வழியை தேர்வு செய்ய வேண்டும்’’ என்றார்.
டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் கடந்த மே மாதம் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்திக்க டெல்லி முதல்வர் வீட்டுக்கு சென்றபோது தாக்கப்பட்டார். இந்த வழக்கில் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட் டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment