Published : 17 Sep 2024 06:05 PM
Last Updated : 17 Sep 2024 06:05 PM

விநாயகர் சதுர்த்தி விவகாரம்: ஆங்கிலேய ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டு காங்கிரஸ் மீது பிரதமர் மோடி சாடல்

புவனேஸ்வர் (ஒடிசா): “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு சிக்கல் இருந்தது; தற்போது விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை காங்கிரஸ் கட்சி பிரச்சினையாக்குகிறது” என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

தனது பிறந்த நாளான இன்று ஒடிசா சென்ற பிரதமர் மோடி, அங்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளைச் சந்தித்தார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பயனாளியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர், அவர்களோடு கலந்துரையாடினார். அப்போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், பிரதமருக்கு இனிப்பு வழங்கினார். இதனையடுத்து, ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கும் ஒடிசா அரசின் சுபத்ரா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இன்று, ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்கள் துவக்கப்பட்டு, ஒடிசாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒடிசா மக்கள் அனைவருக்கும், எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒடிசாவில் பாஜக தலைமையில் புதிய அரசு அமைந்தபோது, ​அதன் ​பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டேன். அதன் பிறகு இது எனது முதல் வருகை. 'ஒடிசா இரட்டை எஞ்சின் ஆட்சியை ஏற்றுக்கொண்டால், அதன் பயணம் வளர்ச்சியின் புதிய சிறகுகளைக் கொண்டிருக்கும்' என்று நான் கூறியிருந்தேன். இன்று, அது உணரப்படுகிறது. இன்று மத்தியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன.

எந்த நாடும், எந்த மாநிலமும் அதன் மக்கள்தொகையில் பாதியளவு உள்ள பெண் சக்தி, வளர்ச்சியில் சமமான பங்களிப்பைப் பெற்றால்தான் முன்னேறும். எனவே, பெண்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை ஒடிசாவின் வளர்ச்சியின் அடிப்படை மந்திரமாக இருக்கும். இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளித்தலின் மற்றொரு நடவடிக்கைதான் பிரதமரின் வீட்டு வசதி திட்டம். இந்தத் திட்டத்தால், சிறிய கிராமங்களில் உள்ள சொத்துக்கள் கூட பெண்களின் பெயர்களுக்கு மாறத் தொடங்கியுள்ளன. இன்று, நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் குடும்பங்கள் கிரஹ பிரவேசம் செய்கின்றன.

இங்கு வருவதற்கு முன் நானும் ஒரு பழங்குடியின குடும்பத்தின் கிரஹ பிரவேச விழாவுக்குச் சென்றிருந்தேன். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அந்த குடும்பத்திற்கு புதிய இல்லம் கிடைத்துள்ளது. அந்த குடும்பத்தினரின் மகிழ்ச்சி, அவர்கள் முகத்தில் இருந்த திருப்தி என்னால் மறக்கவே முடியாது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி மகிழ்ச்சியுடன் எனக்கு கீர் (இனிப்பு) ஊட்டிவிட்டார். நான் கீர் சாப்பிடும் போது, ​​என் அம்மாவின் நினைவு வந்தது. ஏனென்றால், என் அம்மா உயிருடன் இருந்தபோது, ​​நான் எப்போதும் என் பிறந்தநாளில் அவரது ஆசிர்வாதத்தைப் பெறச் செல்வேன். அம்மா எனக்கு இனிப்பு ஊட்டுவது வழக்கம். எனக்கு அம்மா இல்லை. ஆனால் இன்று ஒரு பழங்குடியின தாய் என் பிறந்தநாளில் எனக்கு கீர் ஊட்டி ஆசிர்வதித்தார். இந்த அனுபவம், இந்த உணர்வுதான் என் முழு வாழ்க்கையின் மூலதனம்.

விநாயகர் சதுர்த்தி வழிபாடு என்பது நம் நாட்டின் வெறும் நம்பிக்கை சார்ந்த பண்டிகை அல்ல. நம் நாட்டின் சுதந்திரத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு பெரும் பங்கு உண்டு. ஆங்கிலேயர்கள் அதிகார வெறியில் நாட்டைப் பிளவுபடுத்துவது, பிரித்து ஆட்சி செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, ​​அவர்களுக்கு எதிரான ஆயுதமாக மாறியது விநாயகர் சதுர்த்தி விழா.

விநாயகர் சதுர்த்தி விழாவின் மூலம் இந்தியாவின் ஆன்மாவை லோகமான்ய திலகர் எழுப்பினார். உயர்வு, தாழ்வு, பாகுபாடு என அனைத்தையும் தாண்டி, நம் மதம் நம்மை ஒன்றுபடக் கற்றுத் தருகிறது. பிரித்தாலும் சூழ்ச்சியைக் கடைபிடித்த ஆங்கிலேயர்களுக்கு விநாயகர் சதுர்த்தி உற்சவம் ஓர் உறுத்தலாக இருந்தது. சமூகத்தை பிரித்து அதிகாரத்தை சுவைக்க விரும்பும் அதிகார வெறியர்கள், விநாயகர் உற்சவத்தால் எரிச்சல் அடைகின்றனர். நான் விநாயகர் பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸ் கட்சியும், அதன் ஆதரவு படையும் கோபமடைந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் நடைபெற்ற பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதனை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x